
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் கடந்த மாதம் பதவியேற்று கொண்டார். இந்நிலையில், அவருடைய சொந்த மாநிலத்தில் அவரை கவுரவிக்கும் வகையில் நிகழ்ச்சி ஒன்று இன்று நடந்தது. இதில், கலந்து கொள்வதற்காக, மராட்டியத்தின் மும்பை நகருக்கு கவாய் இன்று சென்றார். மராட்டியம் மற்றும் கோவா வழக்கறிஞர் கவுன்சில் சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசும்போது, மராட்டியத்தின் தலைமை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் மும்பை நகர காவல் ஆணையாளர் ஆகிய 3 முக்கிய அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என அதிருப்தி வெளியிட்டார்.
ஜனநாயகத்தில், நீதிமன்றம், சட்டமன்றம் மற்றும் சட்ட அமலாக்கம் (அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், போலீசார் உள்ளிட்டோர்) ஆகிய 3 தூண்களும் சமம் என சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கவாய் குறிப்பிட்டார். அரசியல் சாசன அமைப்புகள் ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு உரிய மதிப்பை வெளிப்படுத்த வேண்டும்.
மராட்டியத்தில் இருந்து ஒருவர் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாகி இருக்கிறார் என்றால், அவர் மராட்டியத்திற்கு முதன்முறையாக வருகிறார் என்றால், மராட்டியத்தின் தலைமை செயலாளர், டி.ஜி.பி. மற்றும் மும்பை நகர காவல் ஆணையாளர் ஆகியோர், அந்நிகழ்ச்சியில் தாங்கள் இருக்க வேண்டியது முறையானது என உணரவில்லையா? என்றார்.
நெறிமுறைகள் என்பது புதிதான ஒன்றல்ல. அரசியல் சாசன அமைப்புகள் ஒவ்வொன்றும் மற்றொன்றுக்கு உரிய மதிப்பை அளிக்க வேண்டும் என்பதே விசயம் என்றார்.
அரசியல் சாசன அமைப்பின் தலைவர் ஒருவர் மாநிலத்திற்கு முதன்முறையாக வருகிறார் என்றால், அவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பது பரிசீலனை செய்யப்பட வேண்டும். இது சிறிய விசயம் போல் தோன்றலாம். ஆனால், அவற்றை பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
இதனை தொடர்ந்து சைத்ய பூமியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், கவாய் பங்கேற்றார். அப்போது, அவர் கூறிய விசயங்களை கேள்விப்பட்டு, மராட்டிய தலைமை செயலாளர் சுஜாதா சவுனிக், டி.ஜி.பி. ராஷ்மி சுக்லா மற்றும் மும்பை நகர காவல் ஆணையாளர் தேவன் பாரதி ஆகியோர் நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தனர்.
அப்போது கவாயிடம் நெறிமுறைகள் குறைபாடு பற்றி அவர் முன்வைத்த விமர்சனங்களை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த கவாய், நெறிமுறைகள் விசயத்தில் நான் அதனை பெரிதுப்படுத்தவோ, வீண் ஆர்ப்பாட்டம் செய்யவோ இல்லை. ஆனால், உண்மையை தெளிவுப்படுத்தினேன் என கூறியுள்ளார். இந்தியாவில் அரசியல் சாசனமே உச்சபட்சம் வாய்ந்தது என்றும் நாம் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். அதனால், அதன் 3 தூண்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.