பூந்தமல்லி: பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து 10 மணி நேரம் விடியவிடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்களில் ஒப்பந்ததாரர்கள் மற்றும் பல்வேறு பணிகளுக்காக மனு கொடுத்தவர்களிடம் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் லஞ்சமாக பரிசுப் பொருட்களை பெறுவதாக வந்த தகவலையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தமிழகம் முழுவதும் நேற்றுமுன்தினம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அதன்படி, திருவள்ளூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் சங்கர், லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி தலைமையில் நேற்றுமுன்தினம் மாலை சுமார் 5.30 மணியளவில் பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் இன்ஸ்பெக்டர் தமிழரசி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அதிரடியாக நுழைந்து, அலுவலகத்தின் நுழைவாயிலை பூட்டிவிட்டு சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையின்போது நகராட்சி ஆணையர் லதா, நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர் மற்றும் நகராட்சியில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நகராட்சி அலுவலகத்தில் உள்ள அனைத்து அறைகளிலும் தீவிர சோதனை நடைபெற்றது. மேலும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பரிசுப்பொருட்கள் மற்றும் பணத்தை லஞ்சமாக வாங்கியுள்ளனரா என்ற கோணத்தில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒவ்வொருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும், பூந்தமல்லி நகராட்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ஊழியர்களின் இருசக்கர வாகனம் மற்றும் கார்களிலும் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது நகராட்சி அலுவலகத்திற்குள் நுழையவும், வெளியே செல்லயாரும் அனுமதிக்கப்படவில்லை.
நேற்று அதிகாலை 3 மணி வரை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது நகரமைப்பு பிரிவில் கணக்கில் வராத ரூ.1.66 லட்சம், ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து ரூ.34,700 என மொத்தம் ரூ.2 லட்சத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது. இதில் நகரமைப்பு பிரிவு அலுவலர்கள் ராஜ்குமார், குமாரவேல் மற்றும் ஊழியர் சரத்பாபு ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
அரசு சார்பில் நகரமைப்பு பிரிவு பணிகள் இணைய வழியாக மாற்றிய பிறகும் நேற்றுமுன்தினம் நடந்த சோதனையில் பூந்தமல்லி நகராட்சியில் நகரமைப்பு பிரிவிலிருந்து கணக்கில் வராத ரூ.2 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முறையாக ஆய்வு செய்யாமல் அரசு விதிமுறைகளை பின்பற்றாமல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கி குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் தேங்க முக்கிய காரணம் நகரமைப்பு பிரிவுதான் என்று கூறப்படுகிறது.
நேற்று அதிகாலை 3.30 மணி வரை நடந்த இந்த சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் திருவள்ளூர் மாவட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளின் இந்த சோதனையால் நகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
* உதவியாளருக்கு திடீர் வலிப்பு
லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது நகராட்சியில் பணிபுரியும் அலுவலக உதவியாளர் சரத் என்பவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் அவருக்கு உடனடியாக முதலுதவி செய்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
இதனால் இரவு 10.30 மணியளவில் வேகமாக ஆம்புலன்ஸ் நகராட்சி அலுவலகத்திற்குள் சென்றது. ஆம்புலன்ஸ் வருவதற்குள் வலிப்பு வந்தவருக்கு உடல்நிலை சரியானதால் ஆம்புலன்சில் வந்த மருத்துவ பணியாளர்கள், சரத்துக்கு பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் கொடுத்துவிட்டு திரும்பிச் சென்றனர்.
The post பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்தில் கணக்கில் வராத ரூ.2 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.