பூந்தமல்லி, ஜன. 30: ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் விசாரணை கைதியாக புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள போலீஸ் பக்ருதீன், தன்னை தனிமைச் சிறையில் அடைத்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் எம்.ஜோதிராமன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் அறிக்கை தாக்கல் செய்தார்.
அதில், சிறைத்துறை அதிகாரிகளை பக்ருதீன் தாக்கியதால் அவர் மீது சட்டத்திற்கு உட்பட்டு சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. அவரை பழிவாங்கும் நோக்கில் தண்டிக்கவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, நீதிபதிகள், சிறை விதிகளின்படி பக்ருதீனுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். அவருக்கு எதிராக விசாரணை நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
அப்போது, பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. வழக்கறிஞர்களை காணொலி மூலமாக ஆஜராகி வாதிட அனுமதிப்பதில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி வழக்கறிஞர்கள் சார்பில் நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது. இதை கேட்ட நீதிபதிகள், பூந்தமல்லி வெடிகுண்டு வழக்குகள் தொடர்பான சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி மூலம் வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட அனுமதி வழங்கப்படுகிறது. வழக்கறிஞர்கள் மற்றும் வழக்காடிகளுக்கு கழிப்பிடம் மற்றும் தேவையான குடிநீர் வழங்குவதை உயர் நீதிமன்ற பதிவாளர் (நிர்வாகம்) உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
The post பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்திற்கு அடிப்படை வசதிகள்: உயர் நீதிமன்ற பதிவாளருக்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.