பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்த வேளாண் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்!

2 months ago 12

தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் ஒன்றான விழுப்புரம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களையும் ஒருங்கே பெற்ற மாவட்டம் என்ற பெருமையைக் கொண்டிருக்கிறது. இந்த மாவட்டம் புதுச்சேரியுடன் இணையும் புள்ளியில் அமைந்துள்ள கண்டமங்கலம் பகுதியில் சிறப்பான முறையில் வெள்ளாமை நடந்து வருகிறது. நெல், கரும்பு, காய்கறி என பல பயிர்கள் இப்பகுதியில் எப்போதும் விளைவிக்கப்படுகிறது. இத்தகைய கண்டமங்கலம் பகுதியில் தற்போதைய சம்பா பட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் பயிர் சாகுபடி நடந்து வருகிறது. இங்குள்ள பரசுரெட்டிப்பாளையம் என்ற பகுதியிலும் இதேபோல நெல் விவசாயம் அபரிமிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில் திண்டிவனம் வேளாண் அறிவியல் நிலைய இணை பேராசிரியர் (பயிர் பாதுகாப்பு) செந்தமிழ், வேளாண்மை அலுவலர் விஜய், துணை வேளாண்மை அலுவலர் சுப்புராஜ் ஆகியோர் பரசுரெட்டிப்பாளையம் பகுதியில் ஆய்வுப்பணி மேற்கொண்டனர். விளைநிலங்களுக்கு நேரில் சென்று நெற்பயிர்களைப் பார்வையிட்டதோடு, அவற்றின் வளர்ச்சி நிலை, நோய்த்தாக்கம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது விவசாயிகளுக்கு சில ஆலோசனைகளை வழங்கினர். குறிப்பாக அதிக ஈரப்பதம், குறைந்த பகல் நேர வெப்பநிலை, அதிகப்படியான தழைச்சத்து இடுதல், மழை போன்ற காரணிகளால் ஏற்படும் பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைக் கட்டுப்படுத்த உரிய மருந்துகளைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தினர்.

நெற்பயிரைத் தாக்குவதில் இலைச்சுருட்டுபுழு முக்கிய இடத்தை வகிக்கிறது. இவற்றைக் கட்டுப்படுத்த குளோரோடெரலினிபோல் (கோரோஜன்) 60 மி.லி மற்றும் கார்டப் ஹைட்ரோகுளோரைடு எஸ்பி 100 கிராம் / ஏக்கர் என்ற அளவில் தெளிக்கலாம். அல்லது தையோமிதாக்‌ஷம் 50 கிராம் / ஏக்கர் என்ற அளவில் தெளிக்கலாம். அதேபோல குருத்துப்பூச்சி என்கிற தண்டுத்துளைப்பான் தாக்குதலைக் கட்டுப்படுத்த நவலூரான் + இன்டாக்ஸோகார்ப் கலவை 250 மி.லி உடன் கார்டப் ஹைட்ரோ குளோரைடு 200 கிராம் / ஏக்கர் என்ற அளவில் தெளிக்கலாம். ஆனைக் கொம்பன் ஈயைக் கட்டுப்படுத்த பிப்ரோனில் 400 மி.லி அல்லது தையோமிதாக்‌ஷம் 50 கிராம் / ஏக்கர் என்ற அளவில் தெளிக்கலாம். கூண்டுப்புழு மற்றும் நாவாய்ப்பூச்சியைக் கட்டுப்படுத்த குயினால்பாஸ் போன்ற மருந்துகளைப் பயன்படுத்தி கட்டுப்படுத்தலாம்.

நோய்த்தாக்குதலைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ் 10 கிராம் / கிலோ மற்றும் உயிர் உரம் 200 மி.லி பயன்படுத்தி விதைநேர்த்தி செய்யலாம். பாக்டீரியல் இலைக்கருகல் நோயைக் கட்டுப்படுத்த ஸ்ட்ரெப்டோமைசின் சல்பைட் + டெட்ரா சைக்கிளின் கலவை 120 கிராம் மற்றும் காப்பர் ஆக்ஸிகுளோரைடு 50 கிராம் / ஏக்கர் என்ற அளவில் பயன்படுத்தலாம். செம்புள்ளி நோயைக் கட்டுப்படுத்த மெட்டோமினோஸ்ரோவின் 200 மி.லி / ஏக்கர் என்ற அளவில் பயன்படுத்தி நோய்த்தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம் என தெரிவித்தனர்.

பருவமழையும்… பாதுகாப்பும்!

தஞ்சாவூர் மாவட்டம் அதையொட்டிய காவிரி டெல்டா பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்களைப் பாதுகாக்க சில யோசனைகளை தமிழக வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. காவிரி டெல்டா பகுதியில் நெற்பயிர் வளர் மற்றும் பூக்கும் பருவத்தில் உள்ளதால் போதிய வடிகால் வசதி மேற்கொள்ளப்பட வேண்டும். ஒரு வயலில் இருந்து அடுத்த வயல் வழியாக நீரினை வடிக்க வேண்டாம். நீர்ப்பாசனம், உரமிடல் மற்றும் மருந்து தெளிப்பினை ஒத்திவைக்கவும். மழைநீரினை வடித்தவுடன் வரிசை நடவு செய்த வயல்களில் ‘‘கோனோவீடர்” கருவி கொண்டு வேர்ப்பகுதியில் காற்றோட்டம் ஏற்படுத்தவும். மழை நின்றவுடன் நீரினை வடித்த பின் கூடுதலாக 25 சதவீத தழைச்சத்தினை இடுவதால் பயிர் விரைவில் நீர் தேங்கிய பாதிப்பிலிருந்து வெளிவரும். மழைநீரினை வடித்தவுடன், நீர் தேங்கியதால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து விடுபட்டு நெற்பயிர்கள் விரைவாக வளர்ச்சி பெற தமிழக வேளாண் பல்கலைக் கழகத்தின் ‘‘ரைஸ் புளும்” என்ற வளர்ச்சியூக்கியினை இலைவழி தெளிப்பாக ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவும்.

ஒரு சில இடங்களில் தாமதமாக நடவு செய்யப்பட்ட குறுவை நெல் அறுவடை தருணத்தில் இருந்தால், மழையினால் பயிர் சாய்ந்து நெல் மணிகளின் முளைப்பினைத் தடுக்க 10 சத சோடியம் குளோரைடு (உப்பு) கரைசலைத் தெளிக்கவும். மழை நின்றவுடன் நீரினை வடித்த பின் பூஞ்சாணத் தாக்குதலால் பயிர் அழுகல் தென்பட்டால் ஒரு ஏக்கருக்கு 200 மிலி புரபிகுனோசோல் மருந்தினைத் தெளிக்கவும்.

காய்கறிப்பயிர்கள் தற்போது வளர் பருவத்தில் இருக்கும். இச்சமயத்தில் போதிய வடிகால் வசதி மேற்கொள்ளவும். மழை நின்றவுடன் 2.5 கிலோ டிரைகோடெர்மா விரிடியினை 50 கிலோ மணலுடன் கலந்து காய்கறி பயிர்களின் தூர்களுக்கிடையில் இடுவதனால் மண்ணிலிருந்து பரவக்கூடிய நோய்களைத் தவிர்க்கலாம்.

The post பூச்சி, நோய்களைக் கட்டுப்படுத்த வேளாண் நிபுணர்கள் கூறும் ஆலோசனைகள்! appeared first on Dinakaran.

Read Entire Article