சென்னை: நீர்வளத்துறை, வடிவமைப்பு ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் மண்தன்மை மற்றும் ஆராய்ச்சிக் கோட்டத்தின் சார்பில் மார்ச் 12 மற்றும் 13 ஆகிய இரு தினங்களில் நடைபெறும் “மாமழை போற்றுதும்” தொழில்நுட்ப கருத்தரங்கத்தை நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், மங்கத் ராம் சர்மா 12.03.2025 இன்று துவக்கி வைத்து, துவக்க உரை நிகழ்த்தினார்.
நீர்வளத்துறையின் மூலமாக செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டப் பணிகளை மாநில அரசின் பிற துறைகளோடு ஒன்றிணைந்து செயல்படுத்தப்பட வேண்டிய அவசியத்தை குறித்தும், நீர் ஆதாரங்களை நியாயமான முறையில் பயன்படுத்தி நீர் ஆதாரங்களை பேணி பாதுகாத்தலின் அவசியம் குறித்தும் அறிவுறுத்தினார். மேலும் இந்த இரண்டு நாட்கள் பயிற்சி பட்டறை மற்றும் மாணவர்களுக்கான கருத்தரங்கு நிகழ்வு முடிந்தவுடன் அதன் தொடர்பான புதிய முன்னேற்பாடுகள் மற்றும் புதுமையான முயற்சிகள் குறித்த அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தினார்.
கருத்தரங்கின் முதல் நாள்: துறையின் பொறியாளர்களுக்கான பட்டறைப் பயிற்சி கருத்தரங்கம் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், நீர்வளத்துறை மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களின் மூத்த பொறியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் மூலமாக நீர்வள பொறியியலில் சந்திக்கக்கூடிய சவால்கள் மற்றும் அவற்றை எதிர் கொள்ளுதல் தொடர்பான அனுபவ ரீதியிலான கலந்தாலோசனை மற்றும் பயிலரங்கம்.
கருத்தரங்கின் இரண்டாம் நாள்: பொறியியல் இளங்கலை / முதுகலை / முனைவர் பயிலும் பல்வேறு பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களிடமிருந்து புவி தொழில்நுட்ப பொறியியல், கட்டுமானப் பொருட்கள், செயற்கை நுண்ணறிவு, காலநிலை மீள்தன்மை போன்ற தலைப்புகளில் மாநாட்டில் தொழில்நுட்ப கட்டுரைகள் மற்றும் விளக்கக்காட்சிகள் கருத்தரங்க மன்றத்தில் விவாதிக்கும் பொருட்டு சமர்ப்பிக்க கோரப்பட்டுள்ளது. இது பொறியியல் மாணவர்களின் கூர்ந்தாய்வு மேற்கொள்ளும் திறனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் கருத்தரங்கமாகும். தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த தொழில்நுட்ப கட்டுரைக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட உள்ளது.
இந்நிகழ்வில் நீர்வளத்துறை அரசு சிறப்பு செயலாளர் சு.ஸ்ரீதரன், காவேரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியன், நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் சா.மன்மதன், தலைமைப் பொறியாளர் (வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் கட்டுமான ஆதாரம்) எஸ்.கலா, கண்காணிப்புப் பொறியாளர் (வடிவமைப்பு) கிருஷ்ணகுமார். கல்வி நிறுவனங்களின் பேராசிரியர்கள், பொறியாளர்கள் மற்றும் ஒன்றிய மற்றும் மாநில அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post தரமணியில் நீர்வளத்துறையின் சார்பில் நடைபெற்ற “மாமழை போற்றுதும்” தொழில்நுட்பக் கருத்தரங்கை தூக்கி வைத்தார் நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா appeared first on Dinakaran.