திருவள்ளூர்: “பாஜகவின் தொகுதி மறுசீரமைப்பு பாசிச நடவடிக்கைகளுக்கு நாம் உயிரே போனாலும் அடிபணிய மாட்டோம். பாஜகவின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக, ஒட்டுமொத்த இந்தியாவையும் திரட்டுவோம்” என்று திமுக சார்பில் திருவள்ளூரில் நடந்த கண்டனப் பொதுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
திருவள்ளூரில் திமுக சார்பில், மத்திய பாஜக அரசுக்கு எதிரான ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ கண்டனப் பொதுக் கூட்டம் இன்று (மார்ச் 12) நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது: “ஒடிசா மாநிலத்தில் தேர்தல் நடந்தபோது, மரியாதைக்குரிய நவீன் பட்நாயக்கின் செயலாளராகத் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் இருந்தார் என்பதற்காக, பிரதமர் மோடியும் - உள்துறை அமைச்சரும் தமிழகத்தை எவ்வாறெல்லாம் கொச்சைப்படுத்தினார்கள்? ஜெகந்நாதர் கோயில் கருவூலச் சாவியைத் தமிழகத்துக்கு திருடிச் சென்றுவிட்டார்கள், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கருவூலச் சாவி தொடர்பான விசாரணை அறிக்கையைப் பொதுவில் வெளியிடுவோம் என்று பேசினார்களா? இல்லையா?