புழல் மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்கள், பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: மேம்படுத்தப்பட்ட நேர்காணல் அறையை திறந்து வைத்து அமைச்சர் ரகுபதி பேட்டி

2 months ago 15

சென்னை: சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகள், தங்களது உறவினர்களை சிறைக்குள் சந்திக்க பிரத்யேக அறையும், வழக்கறிஞர்கள் தங்களது கட்சிக்காரர்களை சந்திக்க பார்வையாளர் அறையையும் மேம்படுத்துமாறு ஐகோர்ட் அறிவுறுத்தியிருந்தது.  அதன்படி கைதிகளின் உறவினர்களும், வழக்கறிஞர்களும் கைதிகளை சந்திப்பதற்கு முந்தைய தினமே புழல் சிறை சார்பில் அளிக்கப்பட்டுள்ள பிரத்யேக எண்ணில் முன்பதிவு செய்து கொண்டால், மறுநாள் அவர்களுக்கான நேரம் ஒதுக்கப்பட்டு, அந்த குறிப்பிட்ட நேரத்தில் கைதிகளை சந்திக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்காக தனித்தனி அறைகள் உருவாக்கப்பட்டு, அதற்கான திறப்பு விழா நேற்று நடத்தப்பட்டது. பார்வையாளர்கள் நேர்காணல் அறையை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: சிறையில் பார்வையாளர்கள் அறை மேம்படுத்தப்பட்டு, வாரம் இருமுறை, நாளொன்றுக்கு ஒரு கைதி 30 நிமிடங்கள் என்ற அடிப்படையில் 56 பேர் 3 ஷிப்ட் முறையில் ஒரே நாளில் 728 சிறைவாசிகள், தங்களது உறவினர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், ஒரே நேரத்தில் 50 வழக்கறிஞர்கள் தனிப்பட்ட முறையில் சிறைவாசிகளை சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது, திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை என வழக்கறிஞர்களின் நேரத்திற்கு ஏற்ப கைதிகளை சந்தித்து பேச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. செந்தில்பாலாஜி சிறையில் இருந்தபோது, மற்ற சிறைவாசிகளுக்கு வழங்கப்பட்ட நடைமுறையே இவருக்கும் கடைபிடிக்கப்பட்டது, அவர், எந்தவிதமான சிறப்பு வசதிகளையும் கோரவில்லை.

சிறைக் கைதிகள் பார்வையாளர்கள் தொடர்பு கொள்வதற்காக செய்யப்பட்டுள்ள இன்டர்காம் தொலைபேசியில் சிறைத்துறை எந்தவித ஒட்டுக்கேட்பு செயலிலும் ஈடுபடவில்லை. இவ்வாறு அமைச்சர் கூறினார். புழல் சிறை கைதிகளுக் கான கலை பயிற்சி நிறைவு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தலைமை வகித்தார்.

சிறை தலைமை இயக்குநர் மகேஸ்வரர் தயாள் வரவேற்புரை ஆற்றினார். இதில் மாதவரம் எம்எல்ஏ எஸ்.சுதர்சனம், சென்னை சுமனசா அறக்கட்டளை நிறுவனர் டி.எம்.கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சிறைத்துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள், சிறைத்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் நன்றி கூறினர்.

The post புழல் மத்திய சிறையில் கைதிகளை சந்திக்க வழக்கறிஞர்கள், பார்வையாளர்களுக்கு பிரத்யேக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: மேம்படுத்தப்பட்ட நேர்காணல் அறையை திறந்து வைத்து அமைச்சர் ரகுபதி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article