புழல் பகுதியில் பொருள் வாங்குவதற்கான ரேஷன் கடை மாற்றம்: பொதுமக்கள் அவதி

1 day ago 3


புழல்: மாதவரம் மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட சக்திவேல் நகர் பிரதான சாலையில் ரேஷன் கடை உள்ளது. இந்த, ரேஷன் கடையில் புழல் சிவராஜ் தெரு, காந்தி தெரு, திரு.வி.க தெரு, சக்திவேல் நகர், பாலாஜி நகர், கிருஷ்ணா நகர், மேக்ரோ மார்வேல் நகர், மெர்சி நகர் உள்ளிட்ட நகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், தங்களுக்கு தேவையான உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர். தற்போது, இந்த ரேஷன் கடையில் சுமார் 2,200க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இதில், சுமார் 500க்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் 2 கிமீ தூரத்தில் அமைந்துள்ள மகாலட்சுமி நகர் பகுதி ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால், புழல் சிவராஜ் பிரதான சாலை மற்றும் சிவராஜ் 1வது தெரு, 2வது தெரு, 3வது தெரு ஆகிய பகுதிகளில் உள்ள ரேஷன் கார்டுகள், 2 கிமீ தூரத்தில் உள்ள ரேஷன் கடைக்கு மாற்றப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பொதுமக்கள் சார்பில் புழல் அனைத்து சமூக மக்கள் நலச்சங்க கவுரவ தலைவர் ராஜேந்திரன், ஆவடி உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் இளவரசன், செங்குன்றத்தில் உள்ள சைதாப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க பொதுமேலாளர் நீதிராஜன் ஆகியோரை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்.

அதில், சக்திவேல் நகர் பிரதான சாலையில் உள்ள ரேஷன் கடையின் அருகில் சிவராஜ் பிரதான சாலை மற்றும் சிவராஜ் 1வது தெரு, 2வது தெரு, 3வது தெரு அமைந்துள்ளதால், அப்பகுதி மக்கள் மீண்டும் பொருட்களை வாங்கவும், மகாலட்சுமி நகர் அருகில் உள்ள சக்திவேல் நகர் பகுதி மக்கள், மகாலட்சுமி நகர் பகுதியில் பொருட்கள் வாங்கவும் ஏற்பாடு செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளனர். இம்மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

The post புழல் பகுதியில் பொருள் வாங்குவதற்கான ரேஷன் கடை மாற்றம்: பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Read Entire Article