நெல்லை: நெல்லை உடையார்பட்டி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு அதிகரித்து வருவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தாமிரபரணி நதியால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சுமார் 82 ஆயிரம் ஏக்கர் பரப்பு பாசன வசதி பெறுகிறது. தாமிரபரணியில் ஆலைக்கழிவுகள், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், மனித கழிவுகள் உள்ளிட்டவை சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. நெல்லை மாநகர பகுதியில் குறுக்குத்துறை, மீனாட்சிபுரம், மேலநத்தம், வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை, கொக்கிரகுளம், உடையார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், தாமிரபரணியில் கலந்து தண்ணீர் மாசுபட்டு வருகிறது.
தாமிரபரணியில் கழிவுகள் கலப்பதை தடுக்க கோரி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுக்கள் அடிப்படையில் ஐகோர்ட் நீதிபதிகளும் கடந்தாண்டு நெல்லை தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்துவிட்டு சென்றனர். இருப்பினும் தற்போது சாக்கடை கழிவுகள் மீண்டும் உடையார்பட்டி தாமிரபரணி ஆற்றில் அதிகமாக கலந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் அதிக துர்நாற்றம் வீசி வருகிறது. ஆற்றுக்கு குளிக்க செல்வோர் மூக்கை பிடித்து கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே கழிவுநீர் கலப்பதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும், மாநகராட்சியும் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.
The post நெல்லை உடையார்பட்டி பகுதியில் தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பு தடுக்கப்படுமா?.. துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.