புராஜக்ட் நீலகிரி தார் திட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக ரேடியோ காலர் பொருத்தியபோது பெண் வரையாடு உயிரிழப்பு

4 months ago 16

ஊட்டி : புராஜக்ட் நீலகிரி தார் திட்டத்தின் கீழ் கண்காணிப்பு பணிக்காக பெண் வரையாட்டின் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தும்போது உடல்நல குறைபாட்டால் வரையாடு பரிதாபமாக உயிரிழந்தது.முக்கூருத்தி தேசிய பூங்காவில் அழியும் பட்டியலில் உள்ள தமிழ்நாட்டின் மாநில விலங்கான நீலகிரி வரையாடுகள் கணிசமான அளவு உள்ளது.

வனவிலங்குகள் வேட்டை மற்றும் அந்நியர்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறையினர் நாள்தோறும் தீவிர ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர். நீலகிரி வரையாடுகளை பாதுகாப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் புராஜக்ட் நீலகிரி தார் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

கடந்த 2022ம் ஆண்டு துவக்கப்பட்ட இத்திட்டம் 2027ம் ஆண்டு வரை செயல்படுத்தப்படுகிறது. ஆண்டுக்கு இரு முறை வரையாடுகளின் கணக்கெடுக்கப்படுகிறது. வரையாடுகளின் வாழ்விடங்களை மீட்டெடுத்தல், அவற்றின் பழமையான வாழ்விடங்களில் வரையாடுகளை மீண்டும் குடியமர்வு செய்தல், நோய் பாதிப்புள்ள வரையாடுகளில் மாதிரிகள் சேகரித்து அவற்றின் உடல் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து ஆய்வு தகவல்கள் சேமித்து வைக்கப்பட உள்ளது.

இதுதவிர ரேடியோ காலர் பொருத்தப்பட்டு அவற்றின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில், வெஸ்டர்ன் கேட்ச்மென்ட் காவல் பகுதிக்கு உட்பட்ட நம்பர் 3 அணை பகுதியின் அருகில் உள்ள இரும்பு பாலம் சாலையில் நீலகிரி வரையாடு திட்ட இயக்குனர் கணேசன் தலைமையிலான குழு கண்காணிப்பு உரிய அனுமதியுடன் கடந்த 6ம் தேதி ஆண் நீலகிரி வரையாடு ஒன்றிற்கு வன கால்நடை மருத்துவர்கள் குழு ஊசி மூலமாக மயக்க மருந்து செலுத்தி ரேடியோ காலர் கருவி பொருத்தி வனத்தில் விடுவித்தனர்.

இதன் தொடர்ச்சியாக அன்றைய தினம் மதியம் 12 மணியளவில் பெண் நீலகிரி வரையாடு ஒன்றிற்கும் மயக்க மருந்து செலுத்தி ரேடியோ காலர் கருவி பொருத்தும்போது மயக்க நிலையில் இருந்து வெளிவரும்போது எதிர்பாராதவிதமாக அந்த வரையாடு உயிரிழந்தது. இச்சம்பவம் தொடர்பாக கிடைக்க பெற்ற தகவலின் பேரில் தெப்பக்காடு துணை இயக்குநர் வித்யா உத்தரவின் பேரில் முக்கூருத்தி வனச்சரகர் யுவராஜ்குமார் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் கள ஆய்வு மேற்கொண்டனர்.

இது குறித்து துணை இயக்குநர் வித்யா அறிவுறுத்தலின் பேரில், சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி வன உயிரியல் துறை பேராசிரியர் மற்றும் தலைவர் ஸ்ரீகுமார் தலைமையில் வன கால்நடை மருத்துவர்கள் விஜயராகவன், ராஜேஷ்குமார் குழுவினர் மூலம் சம்பவ இடத்தில் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இதில் உயிரிழந்த பெண் வரையாட்டிற்கு 8 வயது இருக்கும் என கண்டறியப்பட்டது.

முதல் கட்ட ஆய்வில் இறந்த நீலகிரி வரையாட்டின் இருதயம், கல்லீரல் மற்றும் சிறுநீரகம் ஆகிய உள் உறுப்புகள் பலவீனம் அடைந்திருந்ததால் இறப்பு நேர்ந்தது என தெரிய வந்துள்ளது. தொடர்ந்து, உடல் பாகங்களின் மாதிரிகள் ேசகரிக்கப்பட்டு ஆய்வகங்களுக்கு அனுப்பப்பட்டது.

The post புராஜக்ட் நீலகிரி தார் திட்டத்தில் கண்காணிப்பு பணிக்காக ரேடியோ காலர் பொருத்தியபோது பெண் வரையாடு உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article