புரதங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

1 month ago 7

ஸ்டாக்ஹோம்: 2024ம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசு அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 3 ஆராய்ச்சியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 2024ம் ஆண்டிற்கான நோபல் பரிசு பெறுவோர் அறிவிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை மருத்துவம் மற்றும் இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

இந்த பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பேக்கர், ஜான் ஜம்பர், மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் தேர்வாகி உள்ளனர். புரதங்கள் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தப் பரிசு அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. டேவிட் பேக்கர் அமினோ அமிலங்களைப் பயன்படுத்தி புதிய வகை புரதத்தை வடிவமைத்துள்ளார். இந்த முறை மருந்துகள், தடுப்பூசிகள் மற்றும் பல அறிவியல் தயாரிப்புகளில் பயன்படுத்தப்படும் புதிய புரதங்களை உருவாக்க வழிவகுத்துள்ளது.

லண்டன் பல்கலைகழகத்தில் பேராசிரியராக உள்ள ஜான் ஜம்பர் மற்றும் டெமிஸ் ஹசாபிஸ் ஆகியோர் இணைந்து ஏற்கனவே அறிந்த புரதங்களின் வடிவமைப்புகளை கணித்து, செயற்கை நுண்ணறிவு கருவியை உருவாக்கினர். இந்த கருவி தற்போது உலகம் முழுவதும் 20 கோடி புரதங்களை ஆராய பயன்படுத்தப்படுகிறது. ஹசாபிஸ், ஜம்பர் இருவரும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி நிறுவனமான கூகுள் டீப் மைண்ட் நிறுவனத்தில் இணைந்து பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.

The post புரதங்கள் குறித்த ஆராய்ச்சிக்காக வேதியியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article