நாசாவில் பணியாற்றும் தமிழக இளைஞருக்கு அமெரிக்க பெண்ணுடன் திருமணம்: செஞ்சி கோயிலில் நடந்தது

2 hours ago 1

செஞ்சி: நாசாவில் விஞ்ஞானியாக பணியாற்றும் தமிழக இளைஞருக்கு அமெரிக்க பெண்ணுடன் காதல் மலர்ந்ததால் அவர் இந்து கலாச்சாரப்படி செஞ்சி அருகே உள்ள கோயிலில் திருமணம் செய்து கொண்டார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா அனக்காவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் கம்பெனியில் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி ஆதிரை மற்றும் தனது இரண்டு மகன்களுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருகின்றனர்.

இவரது மூத்த மகன் அவினாஷ் நாசாவில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வரும் நிலையில் அமெரிக்காவை சேர்ந்த கேத்தரின் ஓசேவி என்பவரை காதலித்து வந்தார். பின்னர் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி அவிநாஷின் குலதெய்வ கோயிலான செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் நேற்று திருமணம் நடைபெற்றது. இந்து கலாச்சாரப் பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு மற்றும் மணமேடையில் புரோகிதர் வேத மந்திரங்கள் ஓத, நாதஸ்வர இசையுடன் இவர்களின் திருமணம் விமரிசயைாக நடந்தது.

திருமண ஜோடிகள் இருவரும் இந்து கலாச்சாரப்படி திருமணம் செய்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாக தெரிவித்தனர். மேலும் மணமகனின் தந்தை பாஸ்கரன் கூறும்போது, எங்கள் குலதெய்வ கோயிலில் மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என பல்லாயிரம் கிலோ மீட்டர் கடந்து இந்து கலாச்சாரப்படி திருமணம் செய்து வைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார். மணமகனின் பெற்றோர் மற்றும் அமெரிக்க மணமகளின் பெற்றோர் ஆகியோர் தமிழ் பாரம்பரிய உடையை அணிந்து திருமணத்தில் பங்கேற்றது அனைவரையும் கவர்ந்தது.

The post நாசாவில் பணியாற்றும் தமிழக இளைஞருக்கு அமெரிக்க பெண்ணுடன் திருமணம்: செஞ்சி கோயிலில் நடந்தது appeared first on Dinakaran.

Read Entire Article