புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) ஆண்டுதோறும் சிறந்த இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. கடந்த 2024ம் ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனைகள் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, கடந்த 2024ம் ஆண்டில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக, இந்திய ஆல் ரவுண்டர் ஜஸ்பிரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பாலி உம்ரிகர் விருது வழங்கப்படும். இந்திய மகளிர் கிரிக்கெட் அணி துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, கடந்தாண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
வாழ்நாள் கிரிக்கெட் சாதனையாளருக்கு வழங்கப்படும் சி.கே.நாயுடு விருது, இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு (51) வழங்கப்பட உள்ளது. அதேபோல், சமீபத்தில் ஓய்வு பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது. வாழ்நாள் சாதனையாளர் விருது பெறும் டெண்டுல்கர், கிரிக்கேட் வரலாற்றில் அதிகபட்சமாக 200 டெஸ்ட் போட்டிகளிலும், 463 ஒரு நாள் போட்டிகளிலும் ஆடி சாதனை படைத்தவர். டெஸ்ட் போட்டிகளில் 15,921 ரன்களும், ஒரு நாள் போட்டிகளில் 18, 526 ரன்களும் குவித்துள்ளார். ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் 100 சதம் விளாசிய வீரராக அவர் திகழ்கிறார்.
The post பும்ராவுக்கு சிறந்த வீரர் விருது: சச்சினுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது; பிசிசிஐ அறிவிப்பு appeared first on Dinakaran.