
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூன்) முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஜூன் 20-ந் தேதி லீட்சில் தொடங்குகிறது. இந்த தொடருக்கான 18 வீரர்கள் கொண்ட இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி மும்பையில் நேற்று அறிவிக்கப்பட்டது. அகர்கர் தலைமையிலான தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.
இந்த மாதம் தொடக்கத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெற்றதால் அடுத்த கேப்டன் யார்? என்று அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் எதிர்பார்த்தபடி சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருப்பினும் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு கேப்டன் பதவி வழங்காதது பலரது மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில் பார்டர்- கவாஸ்கர் கோப்பை தொடரில் ரோகித் இல்லாத சூழலில் இந்திய டெஸ்ட் அணியை பும்ரா வழி நடத்தினார். இதனால் பும்ராதான் இந்திய டெஸ்ட் அணியின் அடுத்த கேப்டன் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் தற்போது கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் பும்ராவுக்கு கேப்டன் பதவி வழங்காதது ஏன்? என்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் விளக்கமளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பும்ரா ஆஸ்திரேலியாவில் இந்திய அணியை வழிநடத்தினார். ஆனால் அவர் எல்லா டெஸ்ட் போட்டிகளுக்கும் முழு உடற்தகுதியுடன் கிடைக்கவில்லை. ஒரு வீரராக நாங்கள் அவரை அதிகமாக விரும்புகிறோம் என்று நினைக்கிறேன். இங்கிலாந்து தொடரில் ஜஸ்பிரித் பும்ராவால் 5 போட்டியிலும் விளையாட முடியும் என்று நான் நினைக்கவில்லை.
அதனை அணி டாக்டர்கள் எங்களிடம் தெரிவித்தனர். அவர் 3 அல்லது 4 போட்டிகளில்தான் விளையாடுவார். இந்த தொடர் எப்படி செல்கிறது, பணிச்சுமையை அவரது உடல் எப்படி தாங்குகிறது என்பதை பொறுத்தே அவர் எத்தனை போட்டிகளில் விளையாடுவார் என்பது முடிவாகும். அவர் எங்களுக்கு மிகவும் முக்கியமான வீரர். அவர் முழு உடற்தகுதியுடன் 3 அல்லது 4 போட்டியில் விளையாடினாலும் அணிக்காக சில வெற்றிகளை தேடித் தருவார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஏற்பட்ட காயத்தில் இருந்து மீண்டு அவர் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது.
அவர் கேப்டனாக இருப்பதைவிட ஒரு வீரராக ஆடுவது எங்களுக்கு முக்கியமாகும். அணியை வழிநடத்தும் போது சக வீரர்களை நிர்வகிப்பது அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். எனவே கேப்டன் பொறுப்பை கொடுத்து அவருக்கு கூடுதல் சுமையை உருவாக்குவதை விட அவர் சிறப்பாக பந்து வீசுவதே அணிக்கு நல்ல விஷயமாகும். எனவேதான் அவருக்கு பதவி வழங்கப்படவில்லை. அது அவருக்கும் தெரியும். இது குறித்து அவரிடம் பேசினோம். அதற்கு அவரும் சரி என்று ஒப்புக்கொண்டார்" என கூறினார்.