
மும்பை,
இங்கிலாந்துக்கு சென்றுள்ள சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் லீட்சில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா 371 ரன்களை இலக்காக நிர்ணயித்த போதிலும் அதை இங்கிலாந்து அணி கடைசி நாளில் வெற்றிகரமாக விரட்டிப்பிடித்தது. பீல்டிங் சொதப்பல் மற்றும் இரு இன்னிங்சிலும் கடைசி கட்டத்தில் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை தாரைவார்த்ததால் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்த இந்திய அணிக்கு 2-வது டெஸ்ட் இன்னும் அதிக சோதனையாக இருக்கப்போகிறது.
2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் உள்ள எட்ஜ்பஸ்டனில் நாளை (புதன்கிழமை) இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இந்த தொடரில் 3 டெஸ்டில் மட்டுமே ஆடுவார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. ஏனெனில் அவரது பணிச்சுமையை கவனத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் 2-வது டெஸ்டில் அவர் ஆட மாட்டார் என்ற செய்திகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் பும்ரா இல்லாத பட்சத்தில் ஷமி போல பந்துவீசும் திறமையை கொண்ட ஆகாஷ் தீப்பை விளையாட வைக்கலாம் என்று இந்திய முன்னாள் வீரரான இர்பான் பதான் யோசனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடவில்லை என்றால் யார் அவருக்கு பதிலாக இந்திய அணியில் விளையாட வேண்டும்?. அது போன்ற சூழ்நிலையில் வலைப்பயிற்சியில் நல்ல பார்மில் இருக்கும் ஆகாஷ் தீப் விளையாட வேண்டும். அவர் ஷமியைப் போன்ற திறமை கொண்ட பவுலர் என்று நான் கருதுகிறேன். அவர் வீசும் நேரான பந்துகள் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணறடிக்கும். ஆக்ரோஷமாக விளையாட செல்லும்போது பேட்ஸ்மேன்களுக்கு பிரச்சினை ஏற்படலாம். நாம் அர்ஷ்தீப் சிங்கை கொண்டு வருவோம். ஆனால் பும்ரா விளையாடவில்லை என்றால், அவருக்குப் பதிலாக ஆகாஷ் தீப் வர வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என கூறினார்.