![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/25/35785909-ashcho.webp)
மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் 2 போட்டிகள் முடிவில் இந்தியா தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
முன்னதாக இந்த தொடரின் முதல் போட்டியில் 2 விக்கெட்டுகள் வீழ்த்திய அர்ஷ்தீப் சிங் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றியதுடன், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் (97) வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராகவும் சாதனை படைத்தார். இந்த சாதனையை அவர் 61 போட்டிகளில் படைத்துள்ளார்.
இந்நிலையில் தற்சமயத்தில் ஸ்டார்க், ஷாகீன் அப்ரிடி ஆகியோரை விட அர்ஷ்தீப் சிங் சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- "அர்ஷ்தீப் சிங்கை எது ஸ்பெஷலாக உருவாக்கியது என்பது பெரிய கேள்வியாகும்? ஏனெனில் அவர் மிகவும் வேகமாக இந்த சாதனையை படைத்துள்ளார். அவர் பந்தை இருபுறங்களிலும் ஸ்விங் செய்கிறார். அது டி20 கிரிக்கெட்டில் எளிதான விஷயம் கிடையாது. பந்தை மீண்டும் மீண்டும் வெளியே எடுத்துச் சென்று அவர் பேட்ஸ்மேன்களுக்கு வலையை விரிக்கிறார். பென் டக்கெட்டுக்கு எதிராக அவர் புல்லர் பந்தை வீசினார்.
உங்களிடம் ஸ்விங் இல்லாமல் போனால் அந்தப் பந்தை வீசுவதற்கு தைரியம் இருக்காது. ஆனால் அர்ஷ்தீப்பிடம் ஸ்விங் இருக்கிறது. கிரிக்கெட் வல்லுனர்களும் அவரது பன்முகத் தன்மையை பாராட்டுகிறார்கள். அவர் ஸ்லோ பவுன்சர் பந்துகளையும் புத்திசாலித்தனமாக வீசுகிறார். ஷாகீன் அப்ரிடி, மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் சிறப்பான இடதுகை வேகப்பந்து வீச்சாளர்கள். ஆனால் டி20 கிரிக்கெட்டில் தற்சமயத்தில் அர்ஷ்தீப் சிங் உண்மையில் சிறந்த பவுலராக செயல்பட்டு வருகிறார்" என்று கூறினார்.