கட்டாக்,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் இன்று மதியம் 1.30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்தியா விளையாட உள்ளது. மறுபுறம் தொடரை இழக்க கூடாது என்பதில் இங்கிலாந்து தீவிரமாக உள்ளது. இதனால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.
இந்திய அணியில் நட்சத்திர வீரர் விராட் கோலி வலது முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக முந்தைய ஆட்டத்தில் ஆடவில்லை. அவர் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோலி களம் இறங்குவதால் ஜெய்ஸ்வால் அல்லது ஸ்ரேயாஸ் அய்யர் தனது இடத்தை இழக்கக்கூடும். சமீபகாலமாக சரியான பார்மின்றி திணறி வரும் கோலி நல்ல நிலைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கிறார். கோலி இன்னும் 94 ரன்கள் எடுத்தால் ஒருநாள் போட்டியில் 14 ஆயிரம் ரன் மைல்கல்லை எட்டுவார்.
இதேபோல் கடந்த ஆட்டத்தில் 2 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்த கேப்டன் ரோகித் சர்மாவும் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளார். அண்மைகாலமாக பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் ரோகித் சர்மா கடந்த ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு எந்த வகையான போட்டியிலும் அரைசதம் அடிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.