
லண்டன்,
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் தலா 387 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகின. பின்னர் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் ஒரு ஓவரில் விக்கெட் இழப்பின்றி 2 ரன் எடுத்திருந்தது.
இந்நிலையில் 4-வது நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 2-வது இன்னிங்சில் 62.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக ஜோ ரூட் 40 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும், பும்ரா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதன் மூலம் இந்தியாவுக்கு 193 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் 17.4 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 58 ரன்கள் எடுத்துள்ளது. லோகேஷ் ராகுல் 33 ரன்களுடன் அவுட் ஆகாமல் உள்ளார். இந்தியாவின் வெற்றிக்கு 135 ரன் தேவை. அதே சமயம் இங்கிலாந்து வெற்றிக்கு 6 விக்கெட் தேவை. இத்தகைய பரபரப்பான சூழலில் கடைசி நாள் ஆட்டம் இன்று நடைபெற உள்ளது.
இந்த தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் அற்புதமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி பலரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார். பும்ரா இல்லாத 2-வது போட்டியிலும் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் வெற்றியிலும் முக்கிய பங்கு வகித்தார். இந்த போட்டியின் 2-வது இன்னிங்சிலும் ஆரம்பத்திலேயே 2 விக்கெட்டுகள் கைபப்ற்றி இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி அளித்தார்.
இந்நிலையில் முகமது சிராஜ் ஒவ்வொரு கேப்டனுடைய கனவு வீரர் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் பாராட்டியுள்ளார்.
இது குறித்து கெவின் பீட்டர்சன் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரு கிரிக்கெட் வீரராக சிராஜை நான் ரொம்பவே விரும்புகிறேன். கொஞ்ச நாளாவே அவரை எனக்குப் பிடிக்கும். அவர் தான் வீசும் ஒவ்வொரு பந்து வீச்சுக்கும் தன்னிடம் உள்ள அனைத்தையும் முழுமையாகக் கொடுக்கிறார். அவர் ஒவ்வொரு கேப்டனின் கனவு வீரர்!" என்று பாராட்டியுள்ளார்.