முத்தரப்பு டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்க அணிக்கு 142 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஜிம்பாப்வே

5 hours ago 3

ஹராரே,

ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் டி20 கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் இன்று முதல் 26-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

இதில் இன்று நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் ஜிம்பாப்வே - தென் ஆப்பிரிக்கா அணிகள் விளையாடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி மாதவரே - பிரையன் பென்னட் களமிறங்கினர். இதில் மாதவரே (1 ரன்) 'ஹிட் விக்கெட்' முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கிளைவ் மடாண்டே 8 ரன்களில் நடையை கட்டினார்.

இந்த இக்கட்டான சூழலில் கைகோர்த்த கேப்ட சிக்கந்தர் ராசா - பிரையன் பென்னட் கூட்டணி பொறுப்பாக விளையாடி அணியை தலைநிமிர செய்தது. இவர்களில் பென்னட் 30 ரன்களிலும், அடுத்து வந்த ரியான் பர்ல் தனது பங்குக்கு 29 ரன்கள் அடித்த நிலையிலும் ஆட்டமிழந்தனர்.

ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ராசா நிலைத்து விளையாடி அணிக்கு வலு சேர்த்தார். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த அவர் 54 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்த ஜிம்பாப்வே 141 ரன்கள் அடித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஜார்ஜ் லிண்டே 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 142 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்க உள்ளது. 

Read Entire Article