
பீஜிங்,
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளிவிவகார மந்திரிகளுக்கான கவுன்சில் கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில், அந்த அமைப்பிலுள்ள சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் மற்றும் பெலாரஸ் ஆகிய 10 உறுப்பு நாடுகளை சேர்ந்த மந்திரிகள் மற்றும் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் இதனை உறுதிப்படுத்தி உள்ளார். இந்த கூட்டத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் கலந்து கொள்கிறார் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது.
இந்த கூட்டத்தில், சீன வெளியுறவு மந்திரி வாங் யி, அந்தந்த உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மற்றும் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர். இதில், பல்வேறு துறைகள் மற்றும் சர்வதேச, மண்டல விவகாரங்களில் ஒத்துழைப்புக்கான பார்வைகளை தலைவர்கள் பரிமாறி கொள்வர் என அதுபற்றிய அறிக்கை தெரிவிக்கின்றது.
சிங்கப்பூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், அதனை முடித்து கொண்டு சீனாவுக்கு புறப்பட்டார். இதன்படி சீனாவுக்கு இன்று சென்றடைந்து உள்ளார்.
5 ஆண்டுகளில் அவர் மேற்கொள்ளும் முதல் சீன பயணம் இதுவாகும். இந்த பயணத்தில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொது செயலாளர் நூர்லன் எர்மெக்பயேவ் என்பவரை பீஜிங்கில் சந்தித்து பேசினார்.
இதுபற்றி மத்திய மந்திரி ஜெய்சங்கர் அவருடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பங்கு மற்றும் முக்கியத்துவம் ஆகியவற்றை பற்றி விவாதித்தோம். அதன் பணிகளை நவீனமயப்படுத்துவதற்கான முயற்சிகள் பற்றியும் ஆலோசனை மேற்கொண்டோம் என பதிவிட்டு உள்ளார்.
சீனாவின் பீஜிங் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் பழ மரக்கன்று ஒன்றையும் அவர் இன்று நட்டார். தூதரக உயரதிகாரிகளிடமும் சிறிது நேரம் அவர் உரையாடினார்.
இதேபோன்று சீன துணை ஜனாதிபதி ஹான் ஜெங்கையும் பீஜிங்கில் இன்று சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் பற்றியும் அவருடன் ஆலோசனை மேற்கொண்டார்.
சமீபத்தில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசர் அஜித் தோவல் ஆகியோர் சீனாவுக்கு சென்று வந்த நிலையில், ஜெய்சங்கரின் இந்த பயணம் அமைந்துள்ளது.
கிழக்கு லடாக்கில், அசல் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சீனா மற்றும் இந்தியா இடையே கடந்த 2020-ம் ஆண்டு கடுமையான மோதல் போக்கு ஏற்பட்ட பின்னர், ராணுவ தளபதிகள் மட்டத்திலான பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. இதன்பின்னர், சீனாவுக்கு முதன்முறையாக மத்திய மந்திரி ஜெய்சங்கர் பயணம் மேற்கொண்டுள்ளார்.