புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை சிலுவைப்பாடு நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்

1 day ago 2

சென்னை: புனித வெள்ளி நேற்று அனுசரிக்கப்பட்டதை முன்னிட்டு, அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டது. கத்தோலிக்க ஆலயங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிலுவைப்பாடு நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மனித குலம் முழுவதையும் பாவத்திலிருந்து மீட்பதற்காகவும், இறைவாழ்வை மனிதருக்கு அளிப்பதற்காகவும் துன்பங்கள் பல அனுபவித்து சிலுவையில் இறந்தார் என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை. புனித வெள்ளி, பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி என்பது ஏசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவையில் இறந்து, மீண்டும் உயிர்த்தெழுந்ததையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படும் நிகழ்வாகும்.

கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மாதம் 5ம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் தமிழக தேவாலயங்களில் பிரார்த்தனை, ஆராதனை போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறது. அதன்படி, நேற்று கிறிஸ்தவ வழிபாட்டில் முக்கியமான புனித வெள்ளி நாள். இந்த நாளானது, ஏசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு (ஈஸ்டர்) கொண்டாட்டத்துக்கு முந்தைய வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்படுகிறது. ஏசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இந்த புனித வெள்ளி அன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். புனித வெள்ளி என்பது கிறிஸ்தவர்களுக்கு துக்க நாளாகும். மக்களுக்காக இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் நீத்த தியாகத்தை நினைவுகூறும் நாள். எனவே, நேற்றைய தினம் பல தேவாலயங்களில் இயேசு கிறிஸ்துவின் மரணத்தை நினைவு கூறும் வகையில் சிலுவைப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் நேற்று புனித வெள்ளி பிரார்த்தனைகள் நடந்தது. அதேபோன்று பல மாவட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் புனித வெள்ளியை கடைப்பிடித்து வருகின்றனர். குறிப்பிட்டு கூற வேண்டும் என்றால் சென்னை, நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் புனித வெள்ளி கடைபிடிக்கப்பட்டது. அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டது. சிலுவையில் இயேசு அறையப்பட்டு உயிர் துறக்கும் முன்பு அவர் பேசிய 7 வார்த்தைகளை மையப்படுத்தி பிரார்த்தனை நடக்கும்.

அதன் அடிப்படையபில் சிஎஸ்ஐ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் ஏறெடுக்கப்பட்டது. கத்தோலிக்க சர்ச்சுகளில் நேற்று மாலையில் சிலுவைப்பாதை பேரணி நடைபெற்றது. சென்னையில் பிரசித்தி பெற்ற சாந்தோம் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும், சிலுவையை ஏந்திக் கொண்டு கிறிஸ்தவர்கள் சிலுவை பாதை ஊர்வலம் சென்றனர். இதேபோன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் புனித வெள்ளி சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில், கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாக கலந்து கொண்டு, சிறப்புப் பிரார்த்தனை மற்றும் சிலுவைப் பாதை நிகழ்வுகளில் பங்கேற்றனர்.

புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினம் கொண்டாடப்பட உள்ளது. கிறிஸ்தவர்களை பொறுத்தவரை இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட 3வது நாளில் உயிர்த்தெழுந்தார் என்ற நம்பிக்கை உள்ளது. அதாவது இயேசு கிறிஸ்து மரணத்தை வென்றார் என்று கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். அந்த நாளை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் நாளாக கொண்டாடி வருகின்றனர். அதன்படி வரும் ஞாயிற்றுக்கிழமை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையை கொண்டாட உள்ளனர்.

The post புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை சிலுவைப்பாடு நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு: நாளை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article