தென்காசி : தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று புனித வெள்ளி திருச்சிலுவை பாதையோடு துவங்கியது.கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த மார்ச் 5ம்தேதி சாம்பல் புதனுடன் துவங்கியது. அதன் தொடர்ச்சியாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளில் மாலையில் சிலுவைப்பாதையும், முதல் ஞாயிறன்று தவக்கால திருப்பயணம் மேற்கொண்டனர்.
இரண்டாவது வாரமாக செங்கோல் நகர் கிளை பங்கிற்கு தவக்கால பயணம், மூன்றாவது வாரமாக இளையோர் இளம்பெண்கள் மற்றும் மறைக்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு சிறப்பு தியானம், நான்காவது வாரம் கேரள மாநிலம் ஆலப்புழா, கிருபாசனம், எடத்துவா ஆகிய இடங்களுக்கு திருப்பயணம், ஐந்தாவது வாரமாக பாளையங்கோட்டை மறைமாவட்டம் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயத்திற்கு மறை மாவட்ட திருப்பயணமாக கலந்து கொண்டனர்.
6வது வாரம் குருத்தோலை ஞாயிறு நடந்தது. நேற்று முன்தினம் பெரிய வியாழனை முன்னிட்டு திருப்பாதம் கழுவுதல் நடந்தது. நேற்று புனித வெள்ளியை முன்னிட்டு திருச்சிலுவை பாதை துவங்கியது. இதில் இயேசுவின் பாடுகளை தத்ரூபமாக இளைஞர்கள் நடித்துக் காட்டினார். தொடர்ந்து திருச்சிலுவை ஆராதனை நடந்தது. புனித வெள்ளி திருவழிப்பாட்டினை வட்டார அதிபரும், பங்குத் தந்தையுமான அருட்தந்தை போஸ்கோ குணசீலன் அடிகளார் தலைமையில் நடந்தது.
இந்த சிறப்பு வழிபாட்டில் தென்காசி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நிறைவில் அனைவருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. இன்று 19ம்தேதி புனித சனியும் அன்று இரவு பாஸ்கா திருப்பலியும், நாளை 20ம்தேதி உயிர்ப்பு பெருவிழாவும் (ஈஸ்டர்) கொண்டாடப்படுகிறது. ஏற்பாடுகளை வட்டார அதிபரும், பங்குத்தந்தையுமான போஸ்கோ குணசீலன் அடிகளார் உதவி பங்குத்தந்தை மிக்கேல் மகேஷ் செய்து வருகின்றனர்.
The post புனித வெள்ளியை முன்னிட்டு தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் திருச்சிலுவை பாதை appeared first on Dinakaran.