திருச்சி: திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடந்தது. இதில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு மக்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். திருச்சி வயலூர் சாலை உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் புத்தூர் குழுமாயி அம்மன் காவல் தெய்வமாக உள்ளது. இக்கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு மாசி திருவிழா கடந்த மாதம் (பிப்ரவரி) 19ம் தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
இதைத்தொடர்ந்து கடந்த 3ம் தேதி மறுகாப்பு கட்டுதல் நடைபெற்றது. 4ம் தேதி காளியாவிட்டம், நேற்று சுத்த பூஜை நடந்தது. நேற்று அம்மன் மேள தாளம் முழங்க தேரில், ஓலை பிடாரியில் வீதியுலா நடந்தது. பக்தர்கள் வீட்டு வாசலில் கோலமிட்டு, மாவிளக்கு, இளநீர், பூ, பழங்கள் படைத்து அம்மனை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் நிகழ்ச்சி இன்று புத்தூர் மந்தையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு காலையில் இருந்தே பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக ஆட்டுக்குட்டிகளுடன் வரத்தொடங்கினர். நேரம் ஆக, ஆக ஏராளமான பக்தர்கள் ஆடுகளுடன் குவிந்தனர். பின்னர் காலை 12 மணி அளவில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. மருளாளி சிவக்குமார் ஆடுகளின் ரத்தத்தை குடித்து பரவசத்தை ஏற்படுத்தினார்.
அப்போது பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டது. முன்னதாக ஓலைப்பிடாரியாக அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மனை வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக குட்டி குடித்தல் விழா நடந்த மந்தைக்கு அழைத்து வந்தனர். விழாவை முன்னிட்டு புத்தூர் நான்கு ரோடு முதல் கோயில் வரை சாலையின் இரு புறமும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. இந்த குட்டி குடித்தல் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். நாளை மஞ்சள் நீராட்டு விழா, 8ம் தேதி அம்மன் குடிபுகுதல் நடக்கிறது.
The post புத்தூர் குழுமாயி அம்மன் கோயிலில் குட்டிக்குடி நிகழ்ச்சி கோலாகலம்: 2,000 ஆடுகளை பலியிட்டு நேர்த்திகடன் appeared first on Dinakaran.