புத்தகங்கள் படிப்பதால் குற்றங்கள் குறைகிறது திண்டுக்கல் புத்தக திருவிழாவை துவக்கி வைத்து நீதிபதி பேச்சு

3 months ago 15

 

திண்டுக்கல், அக். 11: திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலகத்துறை, இலக்கிய களம் சார்பில் 11வது புத்தக திருவிழா டட்லி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நேற்று துவங்கியது. மாலையில் நடந்த துவக்க விழா நிகழ்ச்சிக்கு கலெக்டர் பூங்கொடி தலைமை வகித்தார். டிஆர்ஓ சேக் முகையதீன் வரவேற்றார். இலக்கிய கள தலைவர் மனோகரன் புத்தக திருவிழா அறிமுக உரை நிகழ்த்தினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா புத்தக திருவிழாவை துவக்கி வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘புத்தக திருவிழா நடத்துவதன் மூலம் மாணவர்களின் அறிவுத்திறன், நற்சிந்தனைகள் வளர்கிறது. புத்தகங்கள் படிப்பதால் சைபர் குற்றங்கள் குறைகிறது. அரசியலை கடந்து, சித்தாத்தங்களை கடந்து, ஜாதி, மத உணர்வுகளை கடந்து தமிழர்களாக ஒன்றிணைந்து நடத்தப்படும். இதுபோன்ற புத்தக திருவிழாக்கள் அதிகம் நடத்த வேண்டும் என அரசை கேட்டு கொள்கிறேன்’ என்றார். முதல் விற்பனையை சென்னை கடல் சார் வாரிய துணை தலைவர் வள்ளலார் துவக்கி வைக்க, மாவட்ட எஸ்பி பிரதீப் பெற்று கொண்டார்.
இதில் மாவட்ட நூலக அலுவலர் சரவணகுமார், திட்ட இயக்குனர் திலகவதி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அக்.20ம் தேதி வரை புத்தக திருவிழா நடைபெறுகிறது. இதில் 126 அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. சுமார் 10 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இதனை பார்வையிட பொதுமக்களுக்கு அனுமதி இலவசம் ஆகும். தினமும் காலை 10.30 மணிக்கு எழுத்தாளர்கள் சந்திப்பு, மாணவர்களின் வாசித்தேன் குறித்த கருத்தரங்கு, குறும்படங்கள் திரையிடப்படுகின்றன. பள்ளி மாணவர்களுக்கு உண்டியல் டோக்கன் வழங்கப்பட்டு சுமார் ரூ.1.50 கோடி மதிப்பில் புத்தகம் விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

The post புத்தகங்கள் படிப்பதால் குற்றங்கள் குறைகிறது திண்டுக்கல் புத்தக திருவிழாவை துவக்கி வைத்து நீதிபதி பேச்சு appeared first on Dinakaran.

Read Entire Article