புதுவையில் செங்கல்லுக்கு மாற்றாக பிரிக்காஸ்ட் முறையில் ₹45.50 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு

3 months ago 18

*நவம்பர் மாதம் திறக்க முடிவு

புதுச்சேரி : புதுவையில் செங்கல்லுக்கு மாற்றாக பிரிக்காஸ்ட் முறையில் ரூ.45.50 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இது வரும் நவம்பர் மாதம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.புதுச்சேரி 45 அடி சாலையில் உள்ள குமரகுருபள்ளத்தில் இருந்த அடுக்குமாடி குடியிருப்புகளில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். இந்த குடியிருப்பு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் பழுதடைந்து அவ்வபோது தளத்தின் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதனால் அந்த குடியிருப்பு பொதுமக்கள் வசிப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் இருந்தது. இந்த அடுக்குமாடி குடியிருப்பை இடித்துவிட்டு புதிதாக வீடு கட்டி தரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.45 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, பொதுப்பணித்துறை மூலம் அப்பகுதியில் 2 கட்டிடங்களாக 12 மாடிகளுடன் 216 வீடுகள் கட்டுவதற்கான பணிகள் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. தற்போது இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. எப்போதும் வழக்கமாக செங்கல் சிமெண்ட் வைத்து கட்டிடங்கள் கட்டுவார்கள். தற்போது மணல் தட்டுப்பாடு, செங்கல், சிமெண்ட் ஆகியவற்றின் விலையேற்றத்தால் செங்கலுக்கு மாற்றாக இன்டர்லாக், ஏஒசி, பிரிக்காஸ்ட், ஆலோபிளாக் போன்ற கற்களை கொண்டு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் கட்டுமான செலவினங்கள் குறைகிறது.

மேலும் பணிகள் குறுகிய காலத்தில் முடிகிறது. ஆகையால் பொதுமக்கள் பெரும்பாலும் செங்கல்லுக்கு மாற்றாக இதுபோன்ற புதுவிதமான கற்களையே பயன்படுத்துகின்றனர். இதுவரை இந்த கற்களை பயன்படுத்தி தனியார் நிறுவனங்கள், வீடுகள் போன்றவை மட்டும் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் புதுச்சேரியில் முதல் முறையாக பிரிக்காஸ்ட் கற்களை கொண்டு 12 அடுக்குமாடி வீடுகளை கட்டி வருகின்றன. இந்த குடியிருப்பில் ஒரு ஹால், ரூம், கிச்சன், கழிவறை அடங்கிய 400 சதுர அடியில் ஒரு வீடு அமைகிறது.

இந்த கற்கள் காஞ்சிபுரம் பகுதியில் தயார் செய்யப்பட்டு புதுச்சேரிக்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. இந்த கல் மற்ற கற்களை போன்று இல்லாமல் முன்கூட்டியே அடுக்குமாடி குடியிருப்பு அமையவுள்ள இடத்தை அளவீடு செய்து எந்த பக்கம் சுவர், வாசல், ஜன்னல் அமையவேண்டும் என்று அளந்து அதற்கு ஏற்றார்போல் சுவர் போன்று பெரிய அளவில் ஒரே கல் தயாரிக்கப்படுகிறது. பிறகு அதனை கிரேன் மூலம் தூக்கி சென்று வீட்டின் சுவருக்கு பதில் பொருத்தி தளம் ஒட்டப்படுகிறது. செங்கல்லில் செய்வது போன்று பூசு வேலை, எலக்ட்ரீஷியன், பிளம்பிங் உள்ளிட்ட ேவலைகள் செய்து கொள்ளலாம்.

இந்த நிலையில் பிரிக்காஸ்ட் மூலம் நவீன தொழில்நுட்ப முறையில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதால் பணிகள் தீவிரமாக நடந்து 2 கட்டிடங்கள் கட்டப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளில் 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது ரெடிமேடு சுவர் பொருத்துவதால் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பிரிக்காஸ்ட் மூலம் புதுச்சேரி அரசு சார்பில் முதன்முதலாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதால் இவை தரமானதாக இருக்குமா? என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

‘‘செங்கல்லை விட தரமானது’’

இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், புதுச்சேரியில் முதன் முதலாக பிரிக்காஸ்ட் முறையில் 12 மாடி குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இந்த முறை மூலம் புதுவையில் பல்வேறு தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் கட்டுப்பட்டுள்ளது. அவை எல்லாம் தரமானதாகவே உள்ளது. மேலும் இந்த கல்லின் தரம் குறித்து உரிய ஆய்வு நடத்தி சோதனை செய்து பின்புதான் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு ஒப்பந்ததாரருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த கல் செங்கல்லைவிட தரமாகவும், 50 ஆண்டுகளுக்கு எந்தவித சேதமும் ஆகாது. இதன் மூலம் அரசின் செலவினம் குறைவதோடு குறித்த காலத்துக்குள் வீடுகளை கட்டி கொடுக்க முடியும். தற்போது அனைத்து பணிகளும் முடிந்துவிட்டது. இன்னும் சிறிய வேலைகள் மட்டுமே உள்ளது. அந்த பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. நவம்பர் மாதத்துக்குள் இந்த அடுக்குமாடி குடியிருப்பு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்றனர்.

The post புதுவையில் செங்கல்லுக்கு மாற்றாக பிரிக்காஸ்ட் முறையில் ₹45.50 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு appeared first on Dinakaran.

Read Entire Article