ஆட்டையாம்பட்டி, ஜன.25: ஆட்டையாம்பட்டியில் மூதாட்டி வீட்டில் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். ஆட்டையாம்பட்டி மளிகை கடைவீதியில் முறுக்கு வியாபாரம் செய்து வருபவர் பழனியம்மாள் (80). இவர் வியாபாரம் செய்த பணம் மற்றும் தான் அணிந்திருந்த 7 பவுன் செயினை கல்லாப்பெட்டியில் வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தார். கடந்த 2 நாள் முன்பு, வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் மூதாட்டியின் 7 பவுன் செயினை திருடிச்சென்றுள்ளார். இதுகுறித்து மூதாட்டி ஆட்டையாம்பட்டி போலீசில் புகாரளித்தார். அதன்பேரில் எஸ்ஐ தமிழ்ராஜ் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று காலை போலீசார் இனாம் பைரோஜி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக டூவீலரில் வந்த வாலிபரை நிறுத்தி சோதனையிட்டதில் அவர் பழனியம்மாளின் நகையை திருடியது தெரியவந்தது. அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், ஆட்டையாம்பட்டி அடுத்துள்ள பிச்சம்பாளையம் பூஞ்சோலைகாடு பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் மகன் சுரேஷ்குமார்(23) என்பதும், திருமண விசேஷங்களுக்கு சமையல் கான்ட்ராக்டராக இருப்பதும் தெரியவந்தது. விசாரணையில், கடனை அடைப்பதற்காக, தனது பாட்டியான பழனியம்மாளின் நகையை திருடியதாக தெரிவித்தார். இதையடுத்து, சுரேஷ்குமாரை கைது செய்த போலீசார், சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையிலடைத்தனர்.
The post ஆட்டையாம்பட்டியில் மூதாட்டி வீட்டில் நகை திருடிய வாலிபர் கைது appeared first on Dinakaran.