இடைப்பாடி, ஜன.25: இடைப்பாடி அருகே வைகுந்தம்பாளையம் பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மர்ம விலங்கு கடித்து 10க்கும் மேற்பட்ட ஆடுகள் மற்றும் கன்றுகள் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.இடைப்பாடி அருகே ஆலத்தூர் வைகுந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி பழனிச்சாமி. இவரது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில், இரவு நேரத்தில் மர்ம விலங்கு பட்டிக்குள் புகுந்து கடித்து குதறியதில் ஒரு வாரத்தில் 7 செம்மறி ஆடுகள் உயிரிழந்துள்ளன. மேலும், கன்றுக்குட்டியும் பலியாகியுள்ளது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து(45) என்பவருக்கு சொந்தமான தோட்டத்திற்குள் புகுந்து மர்ம விலங்கு, அங்கு கட்டி வைத்திருந்த ஆட்டினை அடித்து கொன்று, மாமிசத்தை சாப்பிட்டு விட்டு மீதி பாகத்தை அப்படியே விட்டு சென்றுள்ளது. நேற்று அதிகாலை எழுந்து பார்த்த மாரிமுத்து செம்மறி ஆடு உயிரிழந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். இரவு நேரங்களில் கால்நடைகளை தொடந்து வேட்டையாடி வரும் மர்ம விலங்கை வனத்துறையினர் கண்காணிப்பு கேமரா பொருத்தி பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post இடைப்பாடி அருகே மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலி பொதுமக்கள் பீதி appeared first on Dinakaran.