புதுச்சேரி, ஜன. 21: புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் துணைத்தலைவியை நீக்கி, அதன் தலைவி பஞ்சகாந்தி நடவடிக்கை எடுத்து மாநில தலைவருக்கு கடிதம் எழுதி உள்ளது அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி மகளிர் காங்கிரஸ் தலைவியாக இருப்பவர் பஞ்சகாந்தி. இவருடைய பதவிக் காலம் முடிய உள்ள நிலையில் மீண்டும் இவருக்கு பதவி நீட்டிப்பு வழங்க வேண்டுமென்று பஞ்சகாந்தி மற்றும் அவர் ஆதரவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு துணைத் தலைவியான நிஷா உள்ளிட்ட பல்வேறு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் தலைவி மற்றும் துணைத் தலைவி இருவருக்கும் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி பூசல் தீவிரமடைந்தது. இந்த நிலையில் மகளிர் காங்கிரசிலிருந்து துணைத் தலைவி நிஷாவை நீக்கி நடவடிக்கை எடுத்திருப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கத்திற்கு மகளிர் காங்கிரஸ் தலைவி பஞ்சகாந்தி கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ் நிர்வாகியான நிஷா, முப்பெரும் விழா என்ற தலைப்பில் ஒரு விழா நமது காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடத்த, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். மேலும் மாநில தலைவியாக தற்போது வரை செயல்பட்டு கொண்டிருக்கும் என்னிடம் எந்தவிதமான தகவலுமில்லை, அனுமதியும் பெறவில்லை. மாநில மகளிர் காங்கிரஸ் பொதுக்குழுவில் பொங்கல் திருநாளையொட்டி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் கட்சி அலுவலகத்தில் மகளிர்களுக்கு புடவைகள் வழங்கப்பட்டது. அப்போதும் ஒரு சில மகளிரை தன்வசம் வைத்துக் கொண்டு, எந்தவித நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளக்கூடாது என்று பேசி மிரட்டியுள்ளார்.
பொதுகுழுவில் என்னை அவமரியாதைபடுத்தி வருகிறார். மகளிர் அனைவருக்கும் மன உளைச்சல் ஏற்படும் விதமாக பேசுகிறார். கட்சியின் பொதுஅமைதிக்கு பங்கம் விளைவிக்கும் விதத்தில் தனிநபராக செயல்பட்டு மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் ஒற்றுமையின்மையை ஏற்படுத்துகிறார். மகளிர் சிலர் கட்சியில் இருந்து விலகுவதாக கூறுவதால் நிஷாவை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி நடவடிக்கை எடுக்கின்றேன் என்பதை தங்களது கவனத்திற்கு தெரியப்படுத்திக் கொள்கிறேன். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
The post புதுவை காங்கிரஸ் துணைத் தலைவி நிஷா நீக்கம் appeared first on Dinakaran.