சென்னை: “சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதில் மத்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள் ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கின்றார்கள் என்பதை மக்கள் நன்கு அறிவர். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க ஒரே வழியான உண்மையான சம நீதி, சமத்துவ நீதி, சமூக நீதியை வழங்கும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு முன்னோட்டமாக, அதற்கான ஆய்வை மேற்கொள்ளாமல் இனியும் தாமதித்தால் தற்போதைய ஆட்சியாளர்களின் பொய் வேடம் தானாகவே கலையும் நாள் வெகுதொலைவில் இல்லை,” என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சுதந்திர இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படாத நிலையில், இந்தியா முழுமைக்கும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வருகின்றனர். குறிப்பாக 2021-ம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைச் சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.