தவளக்குப்பம், பிப். 16: புதுச்சேரியில் தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆசிரியரை போக்சோ வழக்கில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். சம்பவம் நடந்த பள்ளி பூட்டு போட்டு மூடப்பட்ட நிலையில் பள்ளியை கண்டித்து 18 கிராம மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நீடிக்கிறது. புதுச்சேரி தவளக்குப்பம் அருகே தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு பயிலும் 6 வயது சிறுமி, உடல்நிலை பாதிக்கப்படவே, அவரை மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அப்போது பள்ளியில் அறிவியல் ஆசிரியர் மணிகண்டன் கடந்த சில நாட்களாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவரவே அதிர்ச்சியடைந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் முறையிட்டனர்.
ஆனால் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காத நிலையில் குழந்தைகள் நல குழுவுக்கும், தவளக்குப்பம் காவல் நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். அப்போதும் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குபதிவு செய்ய தாமதிக்கவே ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று முன்தினம் தனியார் பள்ளியை முற்றுகையிட திரண்டனர். அப்போது அங்கிருந்த ஆசிரியர் மணிகண்டனை விரட்டி விரட்டி தாக்கிய நிலையில், போலீசாரோ பெற்றோரை தடுத்து அப்புறப்படுத்தி ஆசிரியரை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், பள்ளியில் இருந்த கண்ணாடி, மேஜை, கணினி அறை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினர்.
தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புதுச்சேரி- கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வந்த சபாநாயகர் செல்வம், போலீஸ் உயரதிகாரிகள் பேச்சுவர்த்தை நடத்தியும் ஏற்காத நிலையில் 7 மணி நேரமாக மறியல் நீடிக்கவே போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் நேரில் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியபின் அனைவரும் கலைந்து சென்றனர். அதன்பிறகு தவளக்குப்பம் போலீசார் முதலியார் பேட்டையை சேர்ந்த ஆசிரியர் மணிகண்டன் (25) மீது நள்ளிரவில் போக்சோ பிரிவின்கீழ் வழக்குபதிந்து உடனே அவரை கைது செய்தனர். பின்னர் அவர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இதனிடையே சிறுமி சம்பவத்தை கண்டித்து 18 மீனவ கிராமத்தினர் தொழிலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மணிகண்டனுக்கு இன்னும் திருமணமாகவில்லை. மேலும் சிறுமியின் உறவினர்கள் மற்றும் ஊர்மக்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக போலீசுக்கு தகவல் கிடைக்கவே, முன்னெச்சரிக்கையாக தவளகுப்பம் 4 முனை சந்திப்பு, தனியார் பள்ளி முன்பு 2வது நாளாக போலீசார் குவிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் கலெக்டரின் உத்தரவுக்கிணங்க சம்பவம் நடந்த பள்ளியில் நேற்று நடக்கவிருந்த 10ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு ரத்து செய்யப்பட்டது. பள்ளிகள் நுழைவு வாயில் பூட்டுபோட்டு மூடப்பட்டு கிடந்ததால் இத்தேர்வில் பங்கேற்க முடியாமல் அப்பள்ளியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் ஏமாற்றமடைந்தனர். அவர்களுக்கு மாற்றுத் தேதியில் செய்முறை தேர்வு நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்திருந்தாலும் எந்த நேரத்திலும் அதிகாரிகள் குழு பள்ளிக்கு சீல் வைக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.
குழந்தைகள் நலக் குழு கமிட்டி இல்லாத அவலம்
புதுச்சேரியில் தனியார் பள்ளியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மணிகண்டன், ஏற்கனவே வேறொரு தனியார் பள்ளியில் இதேபோல் சம்பவத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி வருகிறது. எனவே பள்ளியில் மேலும் சில மாணவிகளிடம் இதுபோன்ற செயலில் ஈடுபட்டாரா? என்ற சந்தேகமும் பெற்றோர்களுக்கு எழுந்துள்ளன. இதுகுறித்து குழந்தைகள் நலக்குழு விசாரணை நடத்தி ஆசிரியர் மணிகண்டன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் புதுச்சேரியில் குழந்தைகள் நலக்குழு கமிட்டி கடந்த ஓராண்டாக செயல்பட்டில் இல்லை. கடந்தாண்டு பிப்ரவரியில் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், விண்ணப்பங்கள் பெற்றும் தற்போது வரை புதிய கமிட்டி அமைக்கவில்லை. இதனால் மாணவிகள் மீதான பாலியல் சீண்டல் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
பஸ்சில் மறைந்திருந்த ஆசிரியரை அடையாளம் காட்டிய சிறுமி
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை அடையாளம் காட்டுவதற்காக நேற்று முன்தினம் பள்ளிக்கு சிறுமியுடன் பெற்றோர், போலீசார், சைல்டு லைன் நிர்வாகிகள் சென்றுள்ளனர். இதை பார்த்தவுடன் ஆசிரியர் மணிகண்டன் யாரிடமும் சிக்காமல் மறைந்துள்ளார். சிறிது நேரத்தில் தனி அறையில் பள்ளியில் பணிபுரியும் ஆண் ஆசிரியர்களை வரவழைத்து சிறுமிடம் அடையாளம் காண்பிக்குமாறு கூறியுள்ளனர். அதில் மணிகண்டன் மட்டும் இல்லாததால் மற்ற ஆசிரியர்கள் யாரையும் சிறுமி காண்பிக்கவில்லை. பிறகு, பள்ளி பேருந்தில் மறைந்திருந்த ஆசிரியர் மணிகண்டனை சிறுமி பார்த்தவுடன் போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளார்.
The post புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டலில் சிக்கிய தனியார் பள்ளிக்கு பூட்டு போக்சோ சட்டத்தில் ஆசிரியர் கைது appeared first on Dinakaran.