புதுச்சேரி மத்திய பல்கலை தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் வெற்றி: மார்க்சிஸ்ட் எம்பி வாழ்த்து

3 weeks ago 6

மதுரை: புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக தேர்தலில் வெற்றி பெற்றுள்ள இந்திய மாணவர் சங்கத்தினருக்கு(எஸ்எப்ஐ) மதுரை எம்பி சு.வெங்கடேசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.எக்ஸ் தளத்தில் மதுரை எம்பி சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளதாவது: 2019ம் ஆண்டிற்கு பிறகு, புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தன. பல்கலைக்கழக துணைவேந்தர் முதல் அனைத்து நிர்வாக இயந்திரங்களும் காவிமயமாக்கப்பட்டிருந்தது. ஊழல்களும் நிறைந்திருந்தன. 60க்கும் மேற்பட்ட புதிய பேராசிரியர்கள் இந்துத்துவா சக்திகளாகவே நியமிக்கப்பட்டு இருந்தனர். பேராசிரியர்களில் ஒரு பகுதியினர் நேரடியாக ஆர்எஸ்எஸ் வகுப்புகளை நடத்தக் கூடியவர்களாக இருந்தனர்.

கல்விக் கட்டண உயர்வு, புதிய கல்விக் கொள்கை, பல்கலைக்கழகத்தின் காவிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு எதிராக போராடிய இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் பழிவாங்கப்பட்டு பல்கலைக்கழகத்திலிருந்தே நீக்கப்பட்டனர். இந்த பின்னணியில், இந்த முறை தேர்தல் களத்தை இந்திய மாணவர் சங்கமும், பகுஜன் மாணவர் அமைப்பும் இணைந்து சந்தித்தது. நான்கு முனைப் போட்டியாக நடைபெற்ற இத்தேர்தலில் வேட்பாளர்கள் மனுத்தாக்கல் தொடங்கியதுமே 12 இடங்களில் இந்திய மாணவர் சங்க வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் வெற்றியைப் பதிவுச் செய்தனர். சமுதாயக் கல்லூரியில் தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய 8 பிரதிநிதிகளும் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்தவர்களே. இவர்களுக்கு எதிராக கல்லூரி இந்துத்வா பேராசிரியர்களால் நிறுத்தப்பட்ட அனைவரும் தோல்வியைச் சந்தித்தனர். இதில் இந்திய மாணவர் சங்கம் 55 இடங்களையும், இணைந்து போட்டியிட்ட பகுஜன் மாணவர் அமைப்பு மூன்று இடங்களையும் பெற்று மகத்தான வெற்றியை பெற்றது.

இவ்வெற்றிக்குப் பின் இரண்டாம் கட்ட 15 மாணவர்களை கொண்ட நிர்வாகக் கவுன்சிலுக்கு நடைபெற்ற தேர்தலில் தலைவர், துணைத் தலைவர், செயலர் உள்ளிட்ட பதவிகளுக்கு மாணவிகளே வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத் தகுந்தது. இவ்வெற்றி புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்த இந்துத்துவா சக்திகளுக்கும், காவிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கும் மிகப்பெரிய பலத்த அடியை கொடுத்திருக்கிறது. தேர்தலில் வென்ற நிர்வாகிகளை வாழ்த்துகிறேன்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post புதுச்சேரி மத்திய பல்கலை தேர்தலில் இந்திய மாணவர் சங்கம் வெற்றி: மார்க்சிஸ்ட் எம்பி வாழ்த்து appeared first on Dinakaran.

Read Entire Article