திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை

3 hours ago 2

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் நேற்றுமுன்தினம் இரவு முதல் விடியவிடிய கனமழை கொட்டியது. இதனை தொடர்ந்து நேற்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது. காலை 6 மணி நிலவரப்படி திருவள்ளூர் மாவட்டத்தில் 312 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அதன்படி கும்மிடிப்பூண்டியில் 42 மி.மீ., பள்ளிப்பட்டில் 5 மி.மீ., ஆர்கே பேட்டையில் 4 மி.மீ., சோழவரத்தில் 35 மி.மீ, பொன்னேரியில் 68 மி.மீ, செங்குன்றத்தில் 50 மி.மீ., ஜமீன் கொரட்டூரில் 4 மி.மீ., பூந்தமல்லியில் 30 மி.மீ., திருவாலங்காட்டில் 7 மி.மீ., திருத்தணியில் 4 மி.மீ., பூண்டியில் 5 மி.மீ., தாமரைப்பாக்கத்தில் 18 மி.மீ, திருவள்ளூரில் 15 மி.மீ., ஊத்துக்கோட்டையில் 10 மி.மீ., ஆவடியில் 15 மி.மீ. என மொத்தம் 312 மி.மீ. மழை சராசரியாக 20.80 மி.மீ. பதிவாகியுள்ளது.

இதில் திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி, பொன்னேரி, புழல், ஆவடி, ஈக்காடு, பூண்டி ஆகிய பகுதிகளில் நேற்று காலை முதல் கனமழை விட்டுவிட்டு பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. மேலும் மழையால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. திருவள்ளூர்  வீரராகவ பெருமாள் கோயிலில் கனமழையால் பிரகாரங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். மேலும் சன்னதி தெருவில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சென்றதால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் கழிவு நீர் கால்வாய் அடைப்பால் பஸ் நிலையம் முழுவதும் கழிவு நீரும், மழை நீரும் கலந்து ஓடியதால் பயணிகள் அவதியுற்றனர்.
புழல், சோழவரம் ஏரிகளில்

நீர்வரத்து அதிகரிப்பு: நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, புழல் ஏரிக்கு நேற்று முன்தினம் 80 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 302 கன அடியாக அதிகரித்துள்ளது. 3,300 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் தற்போது நீர் இருப்பு 3,158 மில்லியன் கனஅடியாக உள்ளது. 21.2 அடி உயரத்தில் தற்போது 20.67 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது. புழல் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 184 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. 96% நிரம்பியுள்ளதால் புழல் ஏரி கடல் போல் காட்சியளித்து வருகிறது.
இதேபோல் 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர் இருப்பு 366 மில்லியன் கன அடியாக உள்ளது. சோழவரம் ஏரிக்கு 35 கன அடி நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது. 18.86 அடி உயரத்தில் தற்போது 9.24 அடி உயரத்திற்கு நீர் இருப்பு உள்ளது.

வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
திருத்தணியில், நேற்று அதிகாலை முதல் காலை 10 மணி வரை பரவலாக மழை பெய்தது. இதனால், பரபரப்பாக காணப்படும் திருத்தணி பேருந்து நிலையம், அரக்கோணம் சாலை, ம.பொ.சி. சாலை, சென்னை பைபாஸ் சாலை, சித்தூர் சாலை ஆகிய பகுதிகள் வெறிச்சோடியது. அதேபோல், சாலையோர வியாபாரிகளும் பாதிப்படைந்தனர். திருத்தணி காசிநாதபுரம் காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அக்கிராம வீதிகளில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படாததால், நேற்று பெய்த மழைக்கு அங்குள்ள கொல்லாபுரி அம்மன் கோயில் தெருவில் 4 வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது.

மேலும், தெருக்களில் மழைநீர் தேங்கி நின்றதால், கிராமமக்கள் அவதி அடைந்தனர். ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் காசிநாதபுரம் காலனியில் கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் ஆர்.கே.பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான அம்மையார்குப்பம், பாலாபுரம், எஸ்விஜி புரம், ராஜா நகரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கன மழை பெய்தது. விளக்கணாம்பூடி புதூரில் தெருக்களில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர்.

The post திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை appeared first on Dinakaran.

Read Entire Article