புதுச்சேரி, ஜன. 31: நெல்லித்தோப்பில் தீபாவளி சீட்டு நடத்தி 274 பேரிடம் ரூ32.88 லட்சம் மோசடி செய்ததாக சிறையில் உள்ள தம்பதி மீது போலீசார் வழக்குபதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்தவர் செல்வி (60). இவர் முன்னாள் ஜிப்மர் மருத்துவமனை ஊழியர். கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் நெல்லித்தோப்பு கஸ்தூரிபாய் நகரை சேர்ந்த பிலோமினா, அவரது கணவர் ஜான் பியர் ஆகியோர் செல்வியை நேரில் சந்தித்து தீபாவளி சீட்டு நடத்தி வருவதாகவும், மாதந்தோறும் ரூ1000 கட்ட வேண்டும், தீபாவளி மாதம் முடிந்த பிறகு கட்டிய ரூ12 ஆயிரம் மற்றும் கூடுதலாக ரூ3 ஆயிரம் சேர்த்து ரூ15 ஆயிரம் தருவதாக கூறியுள்ளார்.
இதனை நம்பிய செல்வி, தனக்கு தெரிந்த 204 பேர் மற்றும் நெல்லித்தோப்பு மார்க்கெட் வீதியை சேர்ந்த 70 பேர் என மொத்தமாக 274 பேர் சேர்ந்துள்ளனர். அவர்கள் கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2024 அக்டோபர் மாதம் வரை சீட்டு பணத்தை கட்டி வந்துள்ளனர். பின்னர் தீபாவளி முடிந்து சீட்டு பணத்தை செல்வி கேட்டபோது, ஜான்பியர் பணத்தை திருப்பி தருவதாக கூறி காலம் தாழ்த்தி வந்தார். அதன்பிறகு செல்வி தொலைபேசி மூலம் தம்பதியை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என வந்தது. இதில் சந்தேகமடைந்த செல்வி, அவர்களது வீட்டுக்கு சென்று பார்த்தபோது வீடு பூட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பிறகே செல்வி ஏமாந்தது தெரியவந்தது. இந்நிலையில் பிலோமினா, அவரது கணவர் ஜான் பியர் ஆகியோர் கடந்த மாதம் 17ம் தேதி பண மோசடி வழக்கில் முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து, காலாப்பட்டு சிறையில் அடைத்து இருப்பதாக செல்விக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து செல்வி உட்பட 274 பேரும் பிலோமினா, ஜான்பியரிடம் சீட்டு பணம் கட்டி ஏமாந்ததாக கூறி, உருளையன்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் உருளையன்பேட்டை போலீசார் பிலோமினா, அவரது கணவர் ஜான் பியர் ஆகியோர் மீது வழக்கு பதிந்துள்ளனர். ஏற்கனவே தம்பதியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் பணத்தை கட்டி சுமார் ரூ20 கோடி வரை ஏமாந்து இருப்பதாகவும், இதில் பல அரசியல் பிரமுகர்கள் பிலோமினாவிடம் பண்டு சீட்டு கட்டி பணத்தை இழந்து இருப்பதும் தெரியவந்தது.
மேலும் அரசியல் பிரமுகர்கள் நேரடியாக காவல் நிலையத்தில் கூறி, அவர்களது பணத்தை வாங்கி உள்ளதாகவும் தெரிகிறது. இந்நிலையில் தம்பதி மீது மற்ற காவல் நிலையங்களில் பாதிக்கப்பட்ட பாெதுமக்கள் புகார் அளித்து வருகின்றனர்.
The post புதுச்சேரி நெல்லித்தோப்பில் தீபாவளி சீட்டு நடத்தி 274 பேரிடம் ரூ32.88 லட்சம் மோசடி appeared first on Dinakaran.