புதுச்சேரி: புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத்துறை சார்பில் படிக்கும் ஆர்வத்தை குழந்தைகளிடம் கொண்டு செல்லும் வகையில் கருவடிக்குப்பம் இசிஆரில் உள்ள காமராஜர் மணிமண்டப வளாகத்தில் `குழந்தைகள் புத்தகம் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் கண்காட்சி 2025’ துவக்க விழா நேற்று நடந்தது. வரும் 28ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் 60 அரங்குகளில் புத்தகங்கள் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சியில், செல்போனில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகளுக்கு அந்த செல்போன் மூலமாகவே நர்சரி ரைம்ஸ்களை தானாக படித்து கற்கவும், அறிவுத்திறனை அதிகரிக்கவும் ஒரு நிறுவனத்தின் சார்பில் வாய்ப்பு ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது.
இதற்காக பல்வேறு உருவ படங்களுடன் கூடிய பேப்பரை அந்த நிறுவனம் உருவாக்கியுள்ளது. அந்த பேப்பரில் உள்ள படங்களை நிறுவனத்தின் செல்போன் ஆப் மூலமாக ஸ்கேன் செய்தால் அதற்கான ரைம்ஸ் அழகிய குரலில் ஒலிக்கிறது. கல்வி, ஆன்மிகம் என எல்லாவித ரைம்ஸ்களும் ஆங்கிலத்தில் ஒலிக்கிறது. தமிழில் வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். படங்கள் கருப்பு வண்ணத்தில் இருந்தாலும் அதனை ஆப் மூலமாக ஸ்கேன் செய்ததும் அவை வண்ண படங்களாக தெரிகிறது. அதேபோல் அந்த பேப்பரில் உள்ள ஓவிய படங்களுக்கு கலரிங் செய்வதற்கு பலவண்ண கிரேயான்களும் கூடவே தருகின்றனர். இந்த படங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் அழித்து மீண்டும் மீண்டும் கலரிங் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
The post புதுச்சேரி கண்காட்சியில் ஸ்கேன் செய்தால் ரைம்ஸ் பாடும் புத்தகம் appeared first on Dinakaran.