புதுக்கோட்டையை நெகிழி கழிவு இல்லாத மாவட்டமாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்

2 weeks ago 3

புதுக்கோட்டை, ஜன.26 : புதுக்கோட்டை மாவட்டத்தை நெகிழி கழிவு இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் என்று கலெக்டர் அருணா கேட்டுக்கொண்டுள்ளார். புதுக்கோட்டை மாநகராட்சி, பெரியார்நகர், காட்டுப்புதுக்குளம் 24 -வது வார்டு பகுதியில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில், நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் சிறப்பு தூய்மைப் பணிகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, நேற்று துவக்கி வைத்து, மாணவிகளுக்கு மீண்டும் மஞ்சப்பை வழங்கும் திட்டத்தின் கீழ், மஞ்சப்பைகளை வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தை தூய்மையாக பசுமை மிகுந்த மாநிலமாக மாற்றிடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தமிழக அரசு ஒருமுறை பயன்படுத்தும் (பிளாஸ்டிக்) நெகிழியை ஒழிப்பதிலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதிலும் முன்னிலை வகித்து வருகிறது.

அதன் அடிப்படையில், பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு, மஞ்சப்பை பயன்பாட்டை ஊக்குவிப்பதன் மூலம் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை பயன்பாட்டை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாடு முழுவதும் மாபெரும் நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் சுத்தம் செய்யும் நிகழ்வினை 2025ம்ஆண்டு முழுவதும், மாதங்களின் இறுதி சனிக்கிழமைகளில் நடைமுறைப்படுத்திட தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இம்மாதத்தில், நீர் நிலைகளில் உள்ள நெகிழி கழிவுகளை அகற்றிடும் வகையில், சிறப்பு தூய்மைப் பணிகள் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், புதுக்கோட்டை மாவட்டத்தில், அறந்தாங்கி நகராட்சி பகுதிகளிலும் மற்றும் ஆலங்குடி, அன்னவாசல், அரிமளம், இலுப்பூர் ஆகிய பேரூராட்சிகளிலும் மற்றும் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களிலும் உள்ள நீர் நிலைகளில், நெகிழி கழிவு சேகரிப்பு மற்றும் தூய்மை செய்திடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தடை செய்யப்பட்ட நெகிழி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. எனவே, புதுக்கோட்டை மாவட்டத்தை நெகிழி கழிவு இல்லா மாவட்டமாக மாற்றுவதற்கு, பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் ஒத்துழைப்பு அளித்திட வேண்டும் எனவும் கலெக்டர் தெரிவித்தார். முன்னதாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியான, ‘சுற்றுச்சூழலைப் பாதுகாக்க என்னுடைய தினசரி வாழ்க்கையில் சாத்தியமான அனைத்து மாற்றங்களையும் செய்வேன் என்றும், எனது குடும்பம், நண்பர்கள் மற்றும் பலருக்கும் சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கவழக்கங்களின் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து ஊக்குவிப்பேன் என்றும் உறுதி அளிக்கிறேன்\” என்ற உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க, அதனைப் பின்தொடர்ந்து, அரசு அலுவலர்கள், மாணவிகள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஏற்றுக்கொண்டனர்.

மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் , புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக்கல்லூரியில் பயிலும் நாட்டுநலப் பணி திட்ட மாணவிகளுக்கு, மீண்டும் மஞ்சப்பை வழங்கும் திட்டத்தின் கீழ், மஞ்சப்பைகளை வழங்கினார். இந்நிகழ்வுகளில், மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் , துணை மேயர் லியாகத் அலி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (த.மா.க.வா.) செல்வக்குமார், உதவிப் பொறியாளர்கள் வெங்கடசுப்ரமணியன்,அருண்குமார், வட்டாட்சியர் பரணி, மண்டல துணை வட்டாட்சியர் லட்சுமணன், சுகாதார அலுவலர் பாஸ்கரன், மாநகர் நல அலுவலர் காயத்ரி, மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

The post புதுக்கோட்டையை நெகிழி கழிவு இல்லாத மாவட்டமாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article