புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்

3 months ago 18

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 21 மீனவர்களை இலங்கை கடற்படையினர் நேற்று மாலை கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம், விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 68 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதில் கலைவாணன் என்பவரது விசைப்படகில் ரமேஷ்(27), ஜானகிராமன்(27), கிருஷ்ணன்(68), குமார்(40), ரமேஷ் (51), ராஜ்(55) மற்றும் வைத்தியநாதனுக்கு தொந்தமான விசைப்படகில் ரவீந்தர்(42), உலகநாதன்(38), அருள்நாதன்(29), வைத்தியநாதன்(30), குமரேசன்(37), மகேஷ்(55) மற்றும் மூர்த்தி என்பருக்கு சொந்தமான விசைப்படகில் மதன்(27), மகேந்திரன்(20), முனிவேல்(66), விஜய்(31), விக்கி (18) என 17 மீனவர்களை நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர்.

இதேபோல் கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று காலை 98 விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இதில் அஞ்சலி தேவிக்கு சொந்தமான விசைப்படகில் சிவக்குமார்(28),சூர்யா(23), சூரியபிரகாஷ்(25), கருப்பசாமி(26) ஆகிய 4பேர் நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டனர். 4 விசைப்படகுடன் 21 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர். இலங்கை கடற்படையினரின் இந்த தொடர் அத்துமீறலை ஒன்றிய அரசு தடுக்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

* வேதாரண்யம் மீனவர்களை தாக்கி ரூ.2 லட்சம் வலைகளை பறித்த இலங்கை கடற்கொள்ளையர்
நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்த புஷ்பவனம் மீனவ கிராமத்தை சேர்ந்த முத்துவேல் (52) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நவீன் (23), சச்சின், (25) ராஜேந்திரன், (60) மாதேஸ்வரன் (27) ஆகிய நான்கு பேரும் புஷ்பவனம் கடற்கரையில் இருந்து மீன்பிடிக்க நேற்றுமுன்தினம் மதியம் கடலுக்கு சென்றனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே 15 கடல் மைல் தொலைவில் வலை விரித்து மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக ஒரு பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், இவர்களை வழிமறித்து தாக்கியதுடன், படகில் இருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான 350 கிலோ மீன்பிடி வலைகளை வெட்டி எடுத்து சென்றனர். இதனையடுத்து நேற்று காலை கரை திரும்பிய மீனவர்கள் இதுபற்றி வேதாரண்யம் கடலோர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

The post புதுக்கோட்டை மீனவர்கள் 21 பேர் சிறைபிடிப்பு: இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம் appeared first on Dinakaran.

Read Entire Article