புதுக்கோட்டை, பிப்.11: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக புதுக்கோட்டைமாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு பேச்சுப்போட்டிகள் மற்றும் தமிழ் இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து இலக்கியக் கூட்டம் நடைபெற உள்ளதாக கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களின் தமிழ் இலக்கியப்பணி, தமிழ்த்தொண்டு, தமிழ் மொழிக்கான பங்களிப்பு ஆகியவற்றை நினைவுகூறும் வகையில் இலக்கியக் கூட்டமும், பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்குப் பேச்சுப்போட்டிகள் மாவட்டந்தோறும் நடத்தப்பெற்று பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப் பெறுகின்றன.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 2024-2025ம் ஆண்டிற்கு தமிழறிஞர்கள், எழுத்தாளர்களான வ.சுப.மாணிக்கம், அகிலன் (எ) அகிலாண்டம், மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டி, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா போன்றோரின் தமிழ்ப்பணியை நினைவுகூறும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் உள்ளூர் இலக்கிய அமைப்புகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் வருகிற 18.2.2025 (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணிக்கு புதுக்கோட்டை, சிவபுரம், ஜெ.ஜெ. கலை அறிவியல் கல்லூரியின் கலைஞர் உள்விளையாட்டரங்கில் இலக்கியக் கூட்டம் நடத்தப்பெறவுள்ளது.
முன்னதாக புதுக்கோட்டை, மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரியில் நாளை 12.2.2025 (புதன்கிழமை) அன்று முற்பகல் 9.30 மணிக்கு 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியும், பிற்பகல் 2.30 மணிக்கு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியும் நடத்தப்பெறவுள்ளன. மாவட்ட அளவில் நடத்தப்பெறும் இப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு தனித்தனியே முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாம் பரிசாக ரூ.3,000, மூன்றாம் பரிசாக ரூ.2,000 வழங்கப்பெறவுள்ளன.
போட்டிகளுக்கான தலைப்புகள், விரிவான விதிமுறைகள் மற்றும் இதர விவரங்கள் அறிய விரும்புவோர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரிலும், 04322-228840 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் இப்போட்டிகளில் பங்கேற்றும், இலக்கியக் கூட்டத்தில் தமிழறிஞர்கள், எழுத்தாளர்கள், தமிழார்வலர்கள், தமிழ் இலக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டு பயனடையலாம். இவ்வாறு புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழ்வளர்ச்சிதுறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போட்டிகள்: கலந்துகொள்ள கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.