புதுக்கோட்டை,பிப்.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கம் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள வேளாண் பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் விவரங்கள் அடங்கிய அனைத்து தரவுகளையும் உள்ளடக்கிய தரவு அடுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் தமிழகத்தில் இவ்விதவேளாண் அடுக்கக பணி வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம் மற்றும் வேளாண் விற்பனைத்துறை, விதை சான்று மற்றும் அங்கக சான்றளிப்புதுறை மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள் மூலமாக மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிக்கான புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இச்செயலியினை பயன்படுத்தி விவசாயிகள் தங்களுடைய வேளாண் தொடர்பான அனைத்து விவரங்களையும் உள்ளீடு செய்து பயன்பெறலாம்.
அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் முறையாக விவசாயிகளுக்கு விரைவில் சென்றடைவதை உறுதி செய்யும் பொருட்டு இவ்வேளாண் அடுக்ககம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி மாநில அரசு இப்பணியினை மேற்கொள்ள உள்ளது. நிலவிவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவுவிவரம் (Farmers Registry) ஒன்றிய வேளாண் அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி மாநிலம் முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. மின்னணு முறையில் விவசாயிகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் விவசாயிகளுக்கென தனித்துவமான அடையாள எண் வழங்கப்படவுள்ளது. மேற்படி தரவு பதிவேற்றம் விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே மேற்கொள்ளப்படும். இனி வருங்காலங்களில் மத்திய மற்றும் மாநில அரசின் விவசாயிகளுக்கான திட்டப்பலன்கள் அனைத்தும் விவசாயிகளின் தரவு தளம் மூலமாகவே வழங்கப்படும்.
ஒருங்கிணைந்த வேளாண் தரவு தளத்தின் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள். அனைத்துத்துறை பயன்களை ஒற்றை சாளர முறையில் பெறலாம். ஒவ்வொரு முறை விண்ணப்பிக்கும்போது ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அரசின் நன்மைகள் சரியான பயனாளிக்கு சென்றடைவதை உறுதிப்படுத்திட முடியும். விவசாயிகள் நேரடியாக வலைதளத்தில் பதிவு செய்வதால் முன்னுரிமை அடிப்படையில் அரசின் பயன்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆதார் எண் அடிப்படையில் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடி பணபரிமாற்றம் செய்யப்படும். (குறிப்பாக நெல் கொள்முதல், பேரிடர் நிவாரணத்தொகை நிதி – (Direct Benefit Transfer) போன்ற நலத்திட்ட உதவிகள். நிலவிவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம் மூலம் கிடைக்கப்பெறும் நன்மைகள் கூட்டுறவு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் எளிய முறையில் பயிர்க்கடன் பெறும் வசதி.
மேலும் விவசாயிகள் இதுவரை அரசிடமிருந்து பெற்ற நன்மைகளை தெரிந்து கொள்ளும் வசதி. இனிவரும் காலங்களில், பிஎம்கிசான், பயிர் காப்பீடு போன்று இதர ஒன்றிய மற்றும் மாநில திட்டங்கள் அனைத்தும் இத்தரவுகளின் அடிப்படையிலேயே வழங்கப்படும். தமிழ்நாட்டின் விவசாயம் மற்றும் விவசாயி சார்ந்த திட்ட பலன்கள் வழங்கும் அனைத்து அரசு துறைகளுக்கும் இத்தரவுகள் வழங்கப்பட்டு, இதன்அடிப்படையிலேயே திட்ட பயன்கள் வழங்கப்படும். இந்த ஒருங்கிணைந்த தரவு தளத்தின் பதிவுகள்படி 24 துறைகளின் மூலம் விவசாயிகள் பயன்பெறலாம். இத்தரவு உள்ளீடு செய்வது தொடர்பான பணிகள் வருவாய் கிராமங்கள் வாரியாக அனைத்து வட்டாரங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளது.
எனவே, அனைத்து கிராமங்களிலும் நடைபெறும் முகாம்களில் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு இந்த ஒருங்கிணைந்த வேளாண் தரவு உள்ளீட்டு பணியினை மேற்கொண்டு விவசாயிகள் அடையாள எண் பெற்று பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் சேவைகளை தங்கள்பகுதி வேளாண்மை துறை அலுவலர்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவு அடுக்கு உருவாக்கம் புதிய செயலி அறிமுகம் appeared first on Dinakaran.