புதுக்கோட்டை,
தமிழர்களின் வீர விளையாட்டாகவும், பாரம்பரியம், கலாசாரத்தை போற்றும் வகையில் ஜல்லிக்கட்டு திகழ்கிறது. வழக்கமாக பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டு மற்றும் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம் என்ற பெருமையை புதுக்கோட்டை மாவட்டம் பெற்றுள்ளது. அதிக வாடிவாசல்களை கொண்டது மட்டுமில்லாமல், ஜல்லிக்கட்டு காளைகளும், காளையர்களும் அதிகமுள்ள மாவட்டமாகவும் திகழ்கிறது.
இந்த ஆண்டு (2025) தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தச்சங்குறிச்சியில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்காக அரசு ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டது.
தச்சங்குறிச்சி கிராமத்தில் புனித வின்னேற்பு அன்னை ஆலய திருவிழா மற்றும் புத்தாண்டையொட்டி விழாக்குழுவினர் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடத்தப்படுகிறது. இன்று காலை 7 மணிக்கு ஜல்லிக்கட்டு தொடங்கும். போட்டியில் பங்கேற்க காளைகளை அதன் உரிமையாளர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இதேபோல் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களும் ஆன்லைனில் பெயர்களை பதிவிட்டுள்ளனர். இதற்கான வாடிவாசலும் தயார் நிலையில் உள்ளது.
களத்தில் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்களும் தயாராக உள்ளனர். அதேநேரத்தில் களத்தில் சீறிப்பாயும் காளைகளையும், காளைகளை வீரர்கள் அடக்குவதையும் பார்வையிட பார்வையாளர்கள், ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர். இன்று தொடங்கும் ஜல்லிக்கட்டு திருவிழா மே மாதம் 31-ந் தேதி வரை நடைபெறும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இனி அடுத்தடுத்து தொடர் ஜல்லிக்கட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.