ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் சமர்ப்பித்தார். கடந்த ஒன்றிய பட்ஜெட்களில் தனிநபர் வருமான வரி சலுகை உயர்த்துவதுபோல் தோன்றினாலும், ஒரு சில தரப்பினருக்கு மட்டுமே அது பலன் அளிக்கக் கூடியவகையில் உள்ளது. இதனால் நடுத்தர மக்கள் பலர் சேமிக்க முடியாமல் தவிக்கின்றனர். 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில் வருவாய் உச்சவரம்பு ரூ. 2.5 லட்சத்தில் இருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட்டது. நிலையான வரிக்கழிவுகளுடன் சேர்த்து கணக்கிட்டால் ரூ. 7 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியிருக்காது. இருப்பினும், நிபந்தனைகளின்படி இந்தச் சலுகை சில தரப்பினருக்கு மட்டுமே பலன் அளிக்கக் கூடியதாக உள்ளது.
புதிய வரி முறை மற்றும் பழைய வரி முறை என இரண்டு வரி முறைகள் அறிவிக்கப்பட்டன. ஆனால், புதிய வரி முறைக்கு மாறுவோர், வீட்டுக்கடன் வட்டி, காப்பீடு பிரீமியம் மீதான வரிச்சலுகைகளைப் பெற முடியாது. இந்நிலையில், நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி உச்சவரம்பு ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ. 4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய வரி அடுக்குகள் புகுத்தப்பட்டுள்ளன. அதன்படி ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வருவாய் ஈட்டுவோருக்கு 5 சதவீதம், ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் ஈட்டுவோருக்கு 10 சதவீதம், ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் ஈட்டுவோருக்கு 15 சதவீதம், ரூ. 16 லட்சம் முதல் ரூ. 20 லட்சத்துக்கு 20 சதவீதம் மற்றும் ரூ. 24 லட்சத்துக்கு மேல் 30 சதவீதம் வருமான வரி கணக்கிடப்படும்.
எனினும், மாதச்சம்பளம் ஈட்டுவோர் ரூ. 12.75 லட்சம் வரையிலும், பிற தனிநபர்கள் ரூ. 12 லட்சம் வரையிலும் வருமான வரி செலுத்த தேவையில்லை. காரணம், ரூ. 12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோருக்கு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரி அடுக்குகளின்படி ரூ. 80,000 வரி செலுத்த வேண்டி வரும். ஆனால், நிலையான கழிவாக கழிக்கப்பட்டு விட்டதால், ரூ. 12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது. அதாவது ஆண்டுக்கு ரூ. 8 லட்சம் ஈட்டுவோருக்கு ரூ. 10,000 முதல் ரூ. 12 லட்சத்துக்கு ரூ. 80,000 வரை வரி தள்ளுபடி செய்யப்படுகிறது. மாதச்சம்பளம் வாங்குபவர்களாக இருந்தால் ரூ. 12.75 லட்சம் வரை வரி செலுத்த தேவையில்லை. ஏனெனில் அவர்களுக்கு கூடுதலாக, நிலையான வரிக்கழிவாக ரூ. 75 ஆயிரம் வழங்கப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ. 16 லட்சம் வருவாய் ஈட்டுவோராக இருந்தால் அவர்களுக்கு ரூ. 4 லட்சம் வரை வரி கிடையாது. பின்னர் ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை 5 சதவீத வரியாக ரூ. 20,000, ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை 10 சதவீத வரியாக ரூ. 40,000, ரூ. 12 லட்சம் முதல் ரூ. 16 லட்சம் வரை 15 சதவீத வரியாக ரூ. 60,000 என மொத்தம் ரூ. 1.2 லட்சம் செலுத்த வேண்டி வரும். தற்போது அமலில் உள்ள வரி விதிப்புடன் ஒப்பிட்டால் வரி ரூ. 50,000 குறையும். ஆண்டுக்கு ரூ. 50 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு ரூ. 1 லட்சத்துக்கு மேல் வரிச்சலுகை கிடைக்கும். உதாரணமாக ரூ. 50 லட்சம் ஆண்டு வருவாய்க்கு புதிதாக அறிவிக்கப்பட்ட வரி அடுக்குகளின்படி ரூ. 10.8 லட்சம் வரி செலுத்த வேண்டும். தற்போதுள்ள வரியுடன் ஒப்பிடுகையில் இது ரூ. 1.1 லட்சம் குறைவு.
புதிய வரி விதிப்பில் யாருக்கு பலன்?
ஆண்டு வருமானம் தற்போதைய வரி புதிய வரி புதிய வரி விதிப்பின்படி பலன்
ரூ. 8 லட்சம் ரூ. 30,000 – ரூ. 30,000
ரூ. 9 லட்சம் ரூ. 40,000 – ரூ. 40,000
ரூ. 10 லட்சம் ரூ. 50,000 – ரூ. 50,000
ரூ. 11 லட்சம் ரூ. 65,000 – ரூ. 65,000
ரூ. 12 லட்சம் ரூ. 80,000 – ரூ. 80,000
ரூ. 13 லட்சம் ரூ. 1,00,000 ரூ. 75,000 ரூ. 25,000
ரூ. 14 லட்சம் ரூ. 1,20,000 ரூ. 90,000 ரூ. 30,000
ரூ. 15 லட்சம் ரூ. 1,40,000 ரூ. 1,05,000 ரூ. 35,000
ரூ. 16 லட்சம் ரூ. 1,70,000 ரூ. 1,20,000 ரூ. 50,000
ரூ. 17 லட்சம் ரூ. 2,00,000 ரூ. 1,40,000 ரூ. 60,000
ரூ. 18 லட்சம் ரூ. 2,30,000 ரூ. 1,60,000 ரூ. 70,000
ரூ. 19 லட்சம் ரூ. 2,60,000 ரூ. 1,80,000 ரூ. 80,000
ரூ. 20 லட்சம் ரூ. 2,90,000 ரூ. 2,00,000 ரூ. 90,000
ரூ. 21 லட்சம் ரூ. 3,20,000 ரூ. 2,25,000 ரூ. 95,000
ரூ. 22 லட்சம் ரூ. 3,50,000 ரூ. 2,50,000 ரூ. 1,00,000
ரூ. 23 லட்சம் ரூ. 3,80,000 ரூ. 2,75,000 ரூ. 1,05,000
ரூ. 24 லட்சம் ரூ. 4,10,000 ரூ. 3,00,000 ரூ. 1,10,000
ரூ. 25 லட்சம் ரூ. 4,40,000 ரூ. 3,30,000 ரூ. 1,10,000
புதிய, பழைய வரி விதிப்புகள் ஓர் ஒப்பீடு
ஆண்டு வருவாய் புதிய வரி விதிப்பு ஆண்டு வருவாய் பழைய வரி விதிப்பு
ரூ. 4 லட்சம் வரி இல்லை ரூ. 3 லட்சம் வரை வரி இல்லை
ரூ. 4 லட்சம்-8 லட்சம் 5% ரூ. 3 லட்சம்-ரூ. 7 லட்சம் 5%
ரூ. 8 லட்சம் ரூ. 12 லட்சம் 10% ரூ. 7 லட்சம்-ரூ. 10 லட்சம் 10%
ரூ. 12 லட்சம் ரூ. 16 லட்சம் 15 % ரூ. 10 லட்சம்-ரூ. 12 லட்சம் 15%
ரூ. 16 லட்சம் ரூ. 20 லட்சம் 20% ரூ. 12 லட்சம்-ரூ. 15 லட்சம் 20%
ரூ. 20 லட்சம் ரூ. 24 லட்சம் 25% ரூ. 15 லட்சத்துக்கு மேல் 30%
ரூ. 24 லட்சத்துக்கு மேல் 30
* பழைய வரிமுறை முற்றிலுமாக ஒழியும்
காப்பீடு பிரீமியம், வீட்டுக்கடன் வட்டிக்கான சலுகைகளை பெற வழி வகுக்கும் பழைய வரி முறையை முற்றிலுமாக ஒழித்து விட்டு, புதிய வரி முறையை அமல்படுத்த வேண்டும் என்பதில் ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்கேற்ப, கடந்த 2023-24 பட்ஜெட்டில் வெளியான வரிச்சலுகையின்படி, புதிய வரி முறையில் ரூ. 7 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. இதனால் சுமார் 72 சதவீதம் பேர் புதிய வரி முறைக்கு மாறி விட்டனர். தற்போது ரூ. 12 லட்சம் வரை வருவாய் ஈட்டுவோர் வருமான வரி செலுத்த தேவையில்லை என்பதால், பழைய வரி முறை யாராலும் ஏற்கப்படாமல் ஏறக்குறைய கைவிடப்பட்டு விடும் என்றே தெரிகிறது.
* ரூ. 12.75 லட்சம் வரை புதிய சலுகை
ரூ. 12 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் ஈட்டுவோர் 15 சதவீத வரி செலுத்த வேண்டி வரும். இருப்பினும், இவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் புதிய நிவாரணம் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ. 12.1 லட்சம் மாத வருவாய் வாங்குபவராகஇருந்தால், முதல் ரூ. 4 லட்சத்துக்கு வரி கிடையாது. அதற்கு அடுத்ததாக ரூ. 4 லட்சம் முதல் ரூ. 8 லட்சம் வரை ஈட்டுவோர் ரூ. 20,000, ரூ. 8 லட்சத்துக்கு மேல் ரூ. 12 லட்சம் வரை ஈட்டுவோர் ரூ. 40,000 செலுத்த வேண்டும். ரூ. 12 லட்சத்துக்கு மேல் ஈட்டியுள்ள ரூ. 10,000க்கு 15 சதவீத வரியாக ரூ. 1,500 சேர்த்து ரூ. 61,500 வரி செலுத்த வேண்டி வரும். இதில், நிவாரணமாக ரூ. 12 லட்சத்துக்கு மேல் உள்ள ரூ. 10,000 போக ரூ. 51,500 கழிக்கப்பட்டு விடும். எனவே, இவர்கள் ரூ. 10,000 வரி செலுத்தினால் போதும். ரூ. 12.75 லட்சம் வரை மேற்கண்ட வகையில் சலுகை கிடைக்கும்.
* ரியல் எஸ்டேட், காப்பீடு சேமிப்பு திட்டங்களின் கதி என்ன?
ஆயுள், மருத்துவ காப்பீடு திட்டங்கள் மற்றும் வரிச்சலுகையுடன் கூடிய சிறு சேமிப்பு திட்டங்களில் பலர் முதலீடு செய்வதற்கு முக்கிய காரணம், வரிச்சலுகை பெற வேண்டும் என்பதுதான். கடந்த முறை புதிய வரி முறைக்கு மாறுவோர் ரூ. 7 லட்சம் வரை வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற நிலை வந்தபோதே ஆயுள், காப்பீடு திட்ட முதலீடுகள் குறைந்து விட்டன. தற்போது ரூ. 12 லட்சம் வரை ஆண்டு வருவாய் ஈட்டுவோர் மேற்கண்ட முதலீடு எதுவும் இல்லாமலேயே புதிய வரி முறையில் வருமான வரி செலுத்த தேவையில்லை என்ற நிலை உருவாகி விட்டது. இதனால் மேற்கண்ட திட்டங்களில் முதலீடுகள் இல்லாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கின்றனர் நிபுணர்கள். இதுபோல், ரியல் எஸ்டேட் துறையில் முதலீடுகள் குறைந்து வருகின்றன. ஆயுள், மருத்துவ காப்பீடு போன்றே வீட்டுக்கடன் வட்டிக்கு வரிச்சலுகை பெற முடியும். தற்போது பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரிச்சலுகையின்படி, ரியல் எஸ்டேட் துறையிலும் முதலீடுகள் குறையும் ஆபத்துக்கள் உள்ளதாக அத்துறையை சேர்ந்த சிலர் தெரிவிக்கின்றனர்.
* வெளிநடப்பு செய்த எதிர்க்கட்சி எம்பிக்கள்
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு மக்களவையில் பட்ஜெட் உரையை வாசிக்கத் தொடங்கியதும், சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் அவரது கட்சி எம்பிக்கள் உள்ளிட்ட சில எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டனர். உபி பிரயாக்ராஜில் நடக்கும் மகா கும்பமேளாவில் கடந்த 29ம் தேதி ஏற்பட்ட நெரிசலில் 30 பக்தர்கள் உயிரிழந்தது குறித்து அவையில் விவாதம் நடத்த வலியுறுத்தினர். கும்பமேளா நெரிசல் பலி விவகாரத்தை விட பட்ஜெட் முக்கியமில்லை என அவர்கள் கோஷமிட்டனர். இந்த அமளிக்கு நடுவே நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரை வாசிப்பை தொடர்ந்தார். சுமார் 2 நிமிடம் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பின்னர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
The post புதிய வருமான வரி சலுகையால் யாருக்கு லாபம்? appeared first on Dinakaran.