
நாமக்கல்லில் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி ரூ.11 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்து உள்ளார். தமிழ்தான் உலகிலேயே பழமையான, மிகவும் தொன்மையான மொழி என வெளிநாடுகளுக்கு செல்லும்போதுகூட பிரதமர் மோடி அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.
மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான், தமிழக முதல்-அமைச்சருக்கு 3 பக்க கடிதம் எழுதி உள்ளார். அதில் புதிய தேசிய கல்வி கொள்கையின் நோக்கம் தாய்மொழியை ஊக்குவிப்பது ஆகும். நாடு முழுவதும் கருத்து கேட்கப்பட்டு தேசிய கல்வி கொள்கையில் திருத்தம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதில் 3 மொழிகளில் எந்த இடத்திலும் தமிழகத்தை பொறுத்தவரை இந்தி கட்டாயம் என்று சொல்லவில்லை.
முதலாவது தாய்மொழி, 2-வது ஆங்கிலம், 3-வது எந்த ஒரு மொழி வேண்டுமானாலும் கற்றுத்தரலாம். தி.மு.க.வின் அரசியல் விளையாட்டால், தமிழகத்திற்கு வரவேண்டிய ரூ.5 ஆயிரம் கோடி நிதி வராமல் நிலுவையில் இருக்கிறது. ஒவ்வொரு நிதிக்கும், ஒவ்வொரு நிபந்தனை உள்ளது. அதை நிறைவேற்றினால்தான் நிதி கிடைக்கும் என மிக தெளிவாக கல்வி மந்திரி தெரிவித்து உள்ளார்.
மக்களை திசை திருப்பாமல், மாணவர்களின் கல்வியில் விளையாடாமல், இதில் அரசியல் செய்யாமல், 3-வது மொழியை கொண்டுவர சொல்கிறார்கள் என்பதை முதல்-அமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.