காதல் திருமணம் செய்த இளம்பெண், கணவர் வெளிநாடு செல்வது பிடிக்காமல் தற்கொலை

6 hours ago 2

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த சின்னமுதலியார்சாவடி சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் முருகன். மீனவர். இவருடைய இளைய மகள் முத்தரசி (வயது 23). இவர், செல்போன் மூலம் ஏற்பட்ட தொடர்பில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமணன் (30) என்பவரை காதலித்து வந்தார். இருவரும் வெவ்வேறு சமூகம் என்பதால் திருமணத்திற்கு லட்சுமணன் வீட்டில் சம்மதிக்கவில்லை.

இந்நிலையில் கடந்த 4 மாதத்திற்கு முன்பு தர்மபுரியில் உள்ள லட்சுமணனின் குலதெய்வ கோவிலில் முத்தரசியை அவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் கணவன், மனைவி இருவரும் சுனாமி குடியிருப்பில் முத்தரசியின் பெற்றோருடன் வசித்து வந்தனர். இதற்கிடையில் லட்சுமணனுக்கு, குவைத் நாட்டில் வேலை பார்ப்பதற்காக அழைப்பு வந்தது. இதனால் லட்சுமணன் அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார். இதற்காக பாஸ்போர்ட், விசா எடுத்த அவர் குவைத் நாட்டில் வேலை செய்ய போகும் கம்பெனியின் கிளை அலுவலகம் உள்ள மும்பைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்றுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக காதல் கணவரை பிரிந்து இருந்த முத்தரசி, அவரை அவ்வப்போது தொடர்பு கொண்டு வெளிநாடு செல்ல வேண்டாம் என கூறிவந்துள்ளார். அவரை பெற்றோர் சமாதானம் செய்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை தந்தை முருகனுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு மாடி பகுதியில் உள்ள கீற்று கொட்டகைக்கு சென்ற முத்தரசி நீண்ட நேரம் ஆகியும் கீழே வரவில்லை. பின்னர் மாடியில் சென்று பார்த்தபோது அங்கு முத்தரசி சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து கோட்டக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே மும்பையில் உள்ள முத்தரசியின் கணவர் லட்சுமணனும் சம்பவம் குறித்து அறிந்ததும் ஊர் திரும்பி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Read Entire Article