புதிய கோத்ரேஜ் நிறுவன வளாகம் திறப்பு விழா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

3 hours ago 3

திருப்போரூர்: சென்னை அருகே ஜப்பான் சிட்டி தொழிற்பேட்டையில் புதிய கோத்ரேஜ் நிறுவன வளாகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை அருகே ஓ.எம்.ஆர். சாலையில் திருப்போரூரை அடுத்துள்ள குண்ணப்பட்டு கிராமத்தில் ஜப்பான் சிட்டி ஒன் ஹப் என்ற தனியார் தொழிற்பேட்டை உள்ளது. இந்த தொழிற்பேட்டையில் பிரபல வீட்டு உபயோகப் பொருட்கள் நிறுவனமான கோத்ரேஜ் தனது புதிய தொழிற்சாலையை அமைத்துள்ளது.

இந்த, தொழிற்சாலையின் திறப்பு விழா நேற்று காலை 9 மணியளவில் நடைபெற்றது. கோத்ரேஜ் குழுமத்தின் தலைவர் நாதிரே கோத்ரேஜ் தலைமை தாங்கினார். கோத்ரேஜ் நிறுவன மேலாண்மை இயக்குநர் சுதிர் சீதாபதி வரவேற்றார். முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய தொழிற்சாலை வளாகத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தொழிற்துறை செயலாளர் தாரேஷ் அகமது,

செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், காஞ்சிபுரம் எம்பி செல்வம், திருப்போரூர் எம்எல்ஏ எஸ்.எஸ்.பாலாஜி, ஒன்றிய குழு தலைவர் எல்.இதயவர்மன், துணை தலைவர் சத்யாசேகர், திருப்போரூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், ஊராட்சி மன்ற தலைவர்கள் குண்ணப்பட்டு விஜி மோகன், பையனூர் சுமிதா முத்துக்குமார், ஆமூர் வரதன், தேவர் ஏஜன்சீஸ் உரிமையாளர் பையனூர் தனசேகரன், ஒன்றியக்குழு உறுப்பினர் வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்துக்காண்டனர்.

முன்னதாக, கிழக்கு கடற்கரை சாலை வழியாக தொழிற்சாலை திறப்பு விழாவிற்கு வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, திருப்போரூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செயலாளர் பையனூர் சேகர், ஒன்றிய குழு துணை தலைவர் சத்யா சேகர் தலைமையில், பையனூர் சந்திப்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.

* 1010 பேருக்கு வேலைவாய்ப்பு
இந்த தொழிற்பேட்டையில் 27 ஏக்கர் பரப்பளவில் கோத்ரேஜ் நிறுவனம் தனது முதல் பிரிவை தொடங்கி உள்ளது. இந்த தொழிற்சாலையில் சோப்பு, பேஸ்ட் போன்றவை தயாரிக்கப்பட உள்ளது. முதல் பிரிவில் மட்டும் 1010 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கி உள்ள இந்நிறுவனம், அடுத்தடுத்த இரண்டு பிரிவுகளை தொடங்கியதும் சுமார் 3000 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் என தெரிகிறது.

* 5 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணை
தொழிற்பேட்டையில் முதற்கட்டமாக வேலை வாய்ப்பு பெற்றுள்ள 1010 பேரில் 50 சதவீதம் பேர் பெண்கள் ஆவர். மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கையர்கள் 5 சதவீதம் பேருக்கு இந்த தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் கோகுல், கார்த்தி, முகமது ஜூபேர்பாஷா, ஆதவ், மணிகண்டசாமி ஆகிய 5 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

* முதல்வருக்கு நினைவுப்பரிசு
கோத்ரேஜ் நிறுவனம் அமைந்துள்ள குண்ணப்பட்டு ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில், அதன் தலைவர் விஜி மோகன், திமுக கிளை செயலாளர் மோகன் ஆகியோர் சார்பில் முதலமைச்சருக்கு நிறுவன வாயிலில் வரவேற்பு அளிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.

The post புதிய கோத்ரேஜ் நிறுவன வளாகம் திறப்பு விழா முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article