
வாரணாசி,
உத்தர பிரதேசத்தின் வாரணாசி நகரில் காசி-தமிழ் சங்கமம் 3.0 நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் வெளிநாட்டு தூதர்களும் கலந்து கொண்டுள்ளனர். காசி மற்றும் தமிழகத்திற்கு இடையேயான சிறப்பான, பழமை வாய்ந்த பிணைப்பை கொண்டாடும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது.
ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற இலக்கை நோக்கி கொண்டு செல்லும் வகையிலான நம்பிக்கைகள், கலாசாரங்கள் மற்றும் பாரம்பரியங்களை இது பிரதிபலிக்கிறது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய வெளிவிவகார துறை மந்திரி ஜெய்சங்கர், இந்தியா மற்றும் உலகத்திற்கு இடையேயான உறவை சிந்தித்து பார்க்கிறேன்.
ஆரம்ப காலத்தில், உலகத்திற்கான தொழில் நுட்பத்திற்கு உற்பத்தி பகுதியாக, வரலாற்று ரீதியாக நாம் இருந்திருக்கிறோம். அதனை மீண்டும் நாம் மீட்டெடுக்க இன்று முயற்சித்து கொண்டிருக்கிறோம் என நான் நினைக்கிறேன். அதன் ஒரு பகுதியாக, புதிய உலகின் சவால்களுக்கு ஏற்ப, புதிய கல்வி கொள்கை வழியே மக்களை நாம் தயார்படுத்த முயற்சித்து கொண்டிருக்கிறோம் என கூறியுள்ளார்.
விண்வெளி துறையில் நாம் முன்பே நமது திறமையை வெளிப்படுத்தி இருக்கிறோம். விண்வெளி துறையின் பெரும்பகுதியை இளைஞர்கள் இயக்கி வருகின்றனர். செயற்கை நுண்ணறிவை (ஏ.ஐ.) எடுத்து கொண்டால், பாரீசில் நடந்த ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு நம்முடைய பிரதமர் சமீபத்தில் நாட்டுக்கு திரும்பியிருக்கிறார் என்றார்.
யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவத்தின் முக்கியத்துவம் பற்றியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவற்றை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தேவையையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.
ஏ.ஐ. மற்றும் ஆளில்லா விமானங்கள் போன்ற நவீன தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியையும் அவர் வலியுறுத்தி கூறினார்.