சென்னை: திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் புதிய இராஜகோபுரங்கள் மற்றும் முன் மண்டபங்களுக்கான கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் பி. கே.சேகர்பாபு மற்றும் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் ஆகியோர் இன்று (02.05.2025) திருவள்ளூர் மாவட்டம், திருவேற்காடு அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் கருவறை வாசற்கால் நிறுவுதல், ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் 3 புதிய இராஜகோபுரங்கள் மற்றும் 2 முகப்பு மண்டபங்களுக்கான கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.
பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு எண்ணற்ற திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
திருவேற்காடு, அருள்மிகு தேவி கருமாரியம்மன் திருக்கோயிலில் ரூ.70.27 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின்கீழ் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. அதில் திருக்கோயில் நிதியில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புதிதாக கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம் கட்டும் பணிகளும், ரூ.4.80 கோடி மதிப்பீட்டில் அன்னதானக் கூடம் விரிவாக்கப் பணிகளும், ரூ.42 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பெருந்திட்ட பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும், உபயதாரர் நிதியில் ரூ.12 கோடியில் உபசன்னதிகள் கிழக்கு முன் மண்டபம், கொடிமர மண்டபம், யாகசாலை மண்டபத் திருப்பணிகளும் ரூ.5.47 கோடி மதிப்பீட்டில் மேற்கு ஐந்து நிலை இராஜகோபுரம், வடக்கு மற்றும் தெற்கு மூன்று நிலை இராஜகோபுரங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
இன்றைய தினம் கருங்கல் கருவறை வாசற்கால் நிறுவுதல், 3 புதிய இராஜகோபுரங்கள் மற்றும் 2 முகப்பு மண்டபங்களுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தோம். இத்திருக்கோயில் சுமார் 19 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் குடமுழுக்கு நடத்திடும் வகையிலும், அடுத்த 50 ஆண்டுகளுக்கு திருக்கோயிலுக்கு வருகின்ற பக்தர்களின் எண்ணிக்கையை அடிப்படையாய் கொண்டும் கட்டமைப்பு வசதிகள் கருங்கல் கட்டுமானப் பணிகளாக மேற்கொள்ளப்படுகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பேசுகின்றபோது திருவேற்காடு திருக்கோயில் திருப்பணியையும், திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெற்று வரும் பெருந்திட்ட வரைவு பணிகளையும் குறிப்பிட்டுள்ளார். இது திராவிட மாடல் ஆட்சி, ஆன்மிக ஆட்சி என்பதை பறைசாற்றுகிறது.
திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ரூ. 57.50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள மாற்று மலைபாதை, சிறுவாபுரி, அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் நலன் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்திடும் வகையில் ரூ.67 கோடி மதிப்பீட்டில் சாலை விரிவாக்கப் பணிக்கு அரசு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறைக்கு இதுவரை ரூ.1,007 கோடி அரசு நிதியாக வழங்கப்பட்டுள்ளது. இந்த அளவிற்கு திருக்கோயில் திருப்பணிகளுக்காக அரசு நிதியை ஒதுக்கி தந்த பெருமை நம் முதலமைச்சர் அவர்களையே சாரும். அதேபோல் உபயதாரர்கள் ரூ.1,323 கோடி அளவிற்கு திருப்பணிகளை செய்து தருகின்றனர்.
இந்த அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இதுவரை 2,880 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. வரும் ஜுலை மாதத்திற்குள் 3,000 திருக்கோயில்களின் குடமுழுக்கை கடக்கும் ஒரு மகிழ்ச்சியான ஆட்சியாக திராவிட மாடல் ஆட்சி திகழும். அதற்கு எல்லா வகையிலும் எங்களுடைய பணி தொடரும்.
இத்திருக்கோயிலில் ரூ.17.47 கோடி மதிப்பீட்டில் உபசன்னதிகள், கிழக்கு முன் மண்டபம், கொடிமர மண்டபம், புதிய இராஜகோபுரங்கள் அமைத்தல் போன்ற திருப்பணிகளை செய்து தருகின்ற உபயதாரர்கள் இராஜாகுமார், ஆனந்த் பழனிசாமி, தனலட்சுமி மற்றும் நரசா குடும்பத்தினருக்கும் தமிழக அரசின் சார்பிலும், இந்து சமய அறநிலையத்துறை சார்பிலும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி. என். ஸ்ரீதர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், ஆவடி மாநகராட்சி மேயர் கு.உதயகுமார், திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, திருக்கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் டெக்கான் என். கே. மூர்த்தி, இணை ஆணையர் ஆ.அருணாசலம், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவிந்தசாமி, பா.சாந்தகுமார், பி.ஏ.சந்திரசேகர செட்டி, க.வளர்மதி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post புதிய இராஜகோபுரங்கள் மற்றும் முன் மண்டபங்களுக்கான கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் அடிக்கல் நாட்டினர். appeared first on Dinakaran.