புதிய அறிவிப்புகளுடன் தயாராகிவரும் 2025-26-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்!

3 hours ago 1

சென்னை,

தமிழக சட்டசபையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் கடந்த மாதம் (ஜனவரி) 6-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. ஆனால், கவர்னர் ஆர்.என்.ரவி, முதலில் தேசிய கீதம் பாடாததை சுட்டிக்காட்டி, தனது உரையை வாசிக்காமல் புறக்கணித்து சென்றார்.

அப்படி இருந்தும் சபாநாயகர் மு.அப்பாவு தமிழில் வாசித்த கவர்னர் உரை அவைக் குறிப்பில் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11-ந் தேதி வரை கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதமும், முதல்-அமைச்சரின் பதில் உரையும் இடம் பெற்றது.

அத்துடன் தேதி குறிப்பிடாமல் தமிழக சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக இம்மாதம் 3-வது வாரம் மீண்டும் கூட இருக்கிறது.

முதல் நாளில் பொது பட்ஜெட்டும், அடுத்த நாள் வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் ஆகிறது. பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசும், வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வமும் தாக்கல் செய்ய உள்ளனர்.

அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தலுக்கு முன்பு கடைசியாக தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இதுதான். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டே தாக்கல் செய்யப்படும். எனவே, தற்போதைய பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.

குறிப்பாக, பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-ல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தப்படும் என்றும், அதன் பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதேபோல், பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இலவச அரசு பஸ் பயண திட்டத்தையும் சற்று விரிவுபடுத்த அரசு யோசித்து வருவதாக தெரிகிறது. தற்போது, இளஞ்சிவப்பு நிற முகப்பு கொண்ட பஸ்சிலும், 'மகளிர் விடியல் பயணம்' பஸ்சிலும் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகிறார்கள். இதை விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

மேலும், பல அறிவிப்புகள் பட்ஜெட்டில் வெளியாக இருப்பதால், அது என்னென்ன? என்பதை எதிர்நோக்கி தமிழக மக்கள் இப்போதே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Read Entire Article