புதர் மண்டி கிடக்கும் உடுமலை காவலர் குடியிருப்பு

2 months ago 10

*விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால் மக்கள் அச்சம்

உடுமலை : உடுமலை காவலர் குடியிருப்பில் புதர் மண்டி விஷ ஜந்துக்கள் நடமாடுவதால் குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.உடுமலை பாபுகான் வீதியில் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகம் உள்ளது. இதன் வளாகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது. அத்துடன் போலீசார் பயன்பெறும் வகையில் கடந்த 2012-ம் ஆண்டு குடியிருப்புகள் கட்டப்பட்டன. இதில் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர், போலீசாருக்கு என தனித்தனியாக 78 குடியிருப்புகள் உள்ளன.

இந்த கட்டிடங்கள் நீண்ட கால பயன்பாடு மற்றும் போதிய பராமரிப்பின்மை காரணமாக சேதம் அடைந்து வருகின்றன. அவற்றை சீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், கட்டிடத்தின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.அதுமட்டுமின்றி குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை கொண்டு செல்லும் கால்வாயும் சேதம் அடைந்து தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால், துர்நாற்றம் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. மேலும் வளாகம் முழுவதும் புதர்மண்டி கிடக்கிறது. நடை பாதையும் சேதம் அடைந்து விட்டது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரப்பும் சூழல் உள்ளது. புதர்களில் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டமும் இருந்து வருகிறது.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில்,“எல்லையில் ராணுவத்தினர் நாட்டை காக்கின்றனர் என்றால் உள்ளூரில் நடைபெறும் சமூக விரோத செயல்களை தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பான வாழ்வை அளிப்பதில் போலீசாரின் பங்கு முக்கியமானதாகும். இவர்கள் பயன்பெறும் வகையில் கட்டப்பட்ட குடியிருப்புகள் பராமரிப்பு இல்லாமல் சேதம் அடைந்து வருவது வேதனை அளிக்கிறது.

பொதுமக்களை பாதுகாக்கும் போலீசார் குடும்பத்தினர் பாதுகாப்பின்றி வாழும் நிலை உள்ளது.எனவே, குடியிருப்புகள் முழுமையாக சேதம் அடையும் முன்பு சீரமைக்க வேண்டும். அத்துடன் போலீசாரின் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக விளையாட்டு உபகரணங்களை கூடுதலாக அமைக்க வேண்டும்.மேலும் சுகாதாரமான குடிநீர் கிடைக்கும் வகையில் தொட்டிகளிலும் தூய்மைப் பணி மேற்கொள்ள வேண்டும்” என்றனர்.

The post புதர் மண்டி கிடக்கும் உடுமலை காவலர் குடியிருப்பு appeared first on Dinakaran.

Read Entire Article