புதர் சூழ்ந்த மருத்துவமனைக்குள் விஷ ஜந்துகள் படையெடுப்பு

3 hours ago 1

*பொதுமக்கள்,ஊழியர்கள் அச்சம்

பெ.நா.பாளையம் : கோவை துடியலூரில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் புதர்கள் சூழ்ந்திருப்பதால் விஷ ஜந்துகள் படையெடுக்கின்றன. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.துடியலூர் வாரசந்தை அருகே அரசு நகர்புர ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது.

இங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். 24 மணி நேரமும் செயல்படக்கூடியபடுக்கை வசதி கொண்ட பிரசவ வார்டும் உள்ளது. துடியலூரை சுற்றியுள்ள கிராமப்புற சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து வரும் கர்ப்பிணிகள் பிரசவத்திற்காக இந்த மருத்துவ மனையில் சேர்க்கப்படுகிறார்கள்.

பரிசோதனை கூடமும் செயல்படுகிறது. செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனை மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பு ஊசியும் போடப்படுகிறது.

இம்மருத்துவ மனையில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள்,செவிலியர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 108 ஆம்புலன்ஸ் இங்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. மேலும் சித்த மருத்துவப்பிரிவும் செயல்படுகிறது.

மருத்துவமனையை சுற்றிலும் சுற்றுச்சுவர் உள்ளது. ஆனால் பின்புறம் சுற்றுச்சுவருக்கும், மருத்துவமனைக்கும் இடைபட்ட இடத்தில் உள்ள கிணற்றை சுற்றிலும் முட்புதர் மூடி கிடக்கிறது.
இந்நிலையில் மருத்துவமனையின் பல பகுதிகளிலும் அடிக்கடி விஷ ஜந்துகளான பாம்பு,தேள்,பூரான் போன்றவை வந்து செல்வதாக கூறப்படுகிறது.

பகல் மற்றும் இரவு வேளைகளில் சாரை மற்றும் நாகப்பாம்புகள் சர்வ சாதாரணமாக உலா வருவதை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பார்த்துள்ளனர். அடிக்கடி பாம்புகள் படை எடுப்பதால் நோயாளிகளும், மருத்துவமனை ஊழியர்களும் இரவு நேரத்தில் வெளியே வர பயப்படுகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வாசல் படி அருகே படம் எடுத்து நின்ற பாம்பை கண்டு சிகிச்சைக்காக வந்த மக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்துள்ளனர்.மருத்துவமனை வளாகத்தில் உள்ள முட்புதரை சுற்றி மண் தரையாக உள்ளது.

பல இடங்களில் பெரிய பெரிய ஓட்டைகள் இருப்பதால் அதனுள் பாம்புகள் தங்குவதற்கு வசதியாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மருத்துவமனையை சுற்றிலும் சுத்தம் செய்ய வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post புதர் சூழ்ந்த மருத்துவமனைக்குள் விஷ ஜந்துகள் படையெடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article