விருதுநகர்: விருதுநகரில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து இன்று காலை ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகரில் கடந்த 5ம் தேதி அதிமுக சார்பில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயலாளரும், மாஜி அமைச்சருமான ராஜேந்திர பாலாஜி, மற்றொரு மாஜி அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாஃபா பாண்டியராஜனுக்கு பொன்னாடை அணிவித்த அதிமுக நிர்வாகி ஒருவரை மேடையிலேயே ராஜேந்திர பாலாஜி கன்னத்தில் அறைந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அதிர்ச்சியடைந்த மாஃபா பாண்டியராஜன் கூட்டம் முடியும் முன்பே வெளியேறினார்.
பின்னர் சென்னைக்கு சென்று கட்சித் தலைமையிடம், ‘விருதுநகர் மாவட்டத்தில் ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர் போல செயல்படுகிறார் என புகார் தெரிவித்தார். இதைக்கேட்டு ஆத்திரமடைந்த ராஜேந்திர பாலாஜி, கடந்த 7ம் தேதி சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில், ‘மாஃபா பாண்டியராஜனை தொலைச்சிடுவேன்… தொலைச்சு என மிரட்டல் விடுத்து, ஒருமையில் பேசினார். இது அதிமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ராஜேந்திர பாலாஜிக்கு கண்டனம் தெரிவித்தும், மாஃபா பாண்டியராஜனுக்கு ஆதரவு தெரிவித்தும் விருதுநகரில் இன்று காலை போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ‘முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை அவமரியாதையாக பேசி, மிரட்டிய ராஜேந்திர பாலாஜியே! நாவை அடக்கி பேசு’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
The post அதிமுக மாஜி அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து போஸ்டர்: விருதுநகரில் பரபரப்பு appeared first on Dinakaran.