‘‘இலைக்கட்சி தலைவர் ஊரில் கோஷ்டி மோதலால் திணறும் பொறுப்பாளர்கள் விழிபிதுங்கி போயிருக்காங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரின் ஊரில் கோஷ்டி மோதலை தடுக்க முடியாமல் பொறுப்பாளர்கள் கடும் திண்டாட்டத்தில் இருக்காங்களாம்.. கட்சியின் வளர்ச்சிக்காக மா.செ.வை தூக்கிய இலைக்கட்சி தலைவர், மூன்று பொறுப்பாளர்களை கொண்டு வந்தாராம்.. அவர்களும் சுற்றிசுற்றி வந்து, புதுப்புது நிர்வாகிகளை நியமிப்பதுடன், தொண்டர்களை உசுப்பேத்திக்கிட்டு இருக்காங்களாம்.. அதே நேரத்தில் கோஷ்டி மோதல் உச்சக்கட்டத்தை எட்டியிருக்காம்.. எந்நேரமும் அதிரடி காட்டும் பகுதி செயலாளர் ஒருவரால் தான், இந்த மோதல் அதிகரிச்சிருப்பதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக காட்டிக்கொள்ளும் அவர், மகளிரணி நிர்வாகியை அவதூறாக பேசினாராம்.. இந்த விவகாரம் அந்த நிர்வாகி காதுக்கு போயிருக்கு.. இதனால கோபத்தின் உச்சத்திற்கே போன அந்த நிர்வாகி, மம்மி கட்சியில இப்படி ஒருவர் இருப்பது வேதனை அளிப்பதாக கூறியதுடன், என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் இலைக்கட்சி தலைவரின் வீட்டிற்கே சென்று தீக்குளிப்பேன் என சொல்லியிருக்காரு..
இந்த விவகாரம் பெரிதானால் பதவிக்கு சிக்கல் வந்திடுமுன்னு, அஸ்தம்பட்டி நிர்வாகியின் ஆபீசுக்கு சமரசத்துக்கு போயிருக்காரு அந்த பகுதி.. அங்கும் மோதல் நடந்திருக்கு.. வெளியே வந்தவரு, சட்டை காலரை தூக்கி கிட்டு, எனது பாக்கெட்டில் தான் தலைவர் இருக்காருன்னு சொல்லிக்கிட்டு போனாராம்.. இந்த விவகாரம் வெளியே தெரிந்தால், கட்சியின் பெயரு கெட்டு போயிடுமேன்னு பயந்து போன பொறுப்பாளர்கள், இருதரப்பையும் அழைச்சி விசாரணை நடத்தியிருக்காங்க.. இதனால மாநகர் முழுவதும் நடக்கும் மோதலை தடுக்க முடியாமல், பொறுப்பாளர்கள் திணறலுக்கு ஆளாகியிருக்காங்களாம்.. தொடர்ந்து தொல்லை கொடுத்து வரும் அந்த பகுதிக்கு மட்டும் என்ன பவர் இருக்குன்னு தெரியாமல் தொண்டர்கள் விழிபிதுங்கி போயிருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஹனிபீ மாவட்டத்தின் ரெண்டு எழுத்து தொகுதியில் குக்கர்காரர் நிக்கணும்னு அக்கட்சி நிர்வாகிகள் கோஷமிட்டது பலாப்பழக்காரரை சீற்றமடையச் செய்திருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘ஹனிபீ மாவட்டம் பிக் பாண்ட்ல குக்கர் கட்சியோட தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சமீபத்துல நடந்திருக்கு.. இதில் குக்கர்காரர் பேசும்போது, ‘எனது உடம்புக்கு எதுவும் இல்ல. 60 வயசு ஆகிட்டதுனால அப்பப்போ மருத்துவ செக் அப்பிற்காக தான் போய் வருகிறேன். இன்னும் 30 வருடத்திற்கு நான் இந்த கட்சியை சிறப்பாக கொண்டு போவேன். அதனால எல்லோரும் சந்தோஷமா இருங்க’ என்றாராம்.. இதைக் கேட்டதும், நிர்வாகிகள் வரும் 2026 தேர்தல்ல ஹனிபீ மாவட்டத்தின் இரண்டெழுத்து தொகுதியில நீங்க நிக்கணுமுன்னு கோஷமிட்டாங்களாம்.. அதுக்கு அவரும் தலையாட்டிட்டு சென்றிருக்காரு.. இதையறிந்த பலாப்பழக்காரரின் ஆதரவாளர்கள் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாம்.. ஏற்கனவே அந்த தொகுதியில மூணு முறை வெற்றி பெற்றவர் பலாப்பழக்காரர்.. தற்போது சிட்டிங் எம்எல்ஏவாகவும் இருக்கிறார். மறுபடியும் மலராத கட்சி, இலைக்கட்சி கூட்டணி தயவுல ஜெயிக்கலாம்னு ஆலோசனை செஞ்சுகிட்டு இருக்கிறாரு.. இந்த சூழலில், குக்கர் தலைவரை ஏம்பா இங்கு கொண்டு வந்து நிறுத்த பார்க்குறீங்க என அவரது கட்சி நிர்வாகிகள், சிலரிடம் கோபப்பட்டாராம்..
இதைப்பற்றி யோசிக்காமல் குக்கர் தரப்பு வேலையிலே தீவிரமாக களமிறங்கியுள்ளதாம்.. இதனால் பலாப்பழக்காரர் விழிபிதுங்கி போய் உள்ளாராம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மலராத கட்சி மாநில நிர்வாகி மீது மேலிடத்தில் புகார் தெரிவிக்க சீனியர் நிர்வாகிகள் முடிவு செய்து இருக்காங்களாமே..’’ எனக் கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மன்னர் மாவட்டத்தில் மலராத கட்சி நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று அவர்களுக்குள் அவ்வப்போது மோதல் இருந்து வருவதாக சீனியர் நிர்வாகிகள் தனித்தனியாக தலைமைக்கு புகார் கடிதங்களை அனுப்பி வருகிறார்களாம்.. கடந்த சில மாதங்களுக்கு முன் மாஜி மற்றும் தற்போது உள்ள நிர்வாகிகளுக்குள் முட்டல் மோதல் ஏற்பட்டிருக்கு.. இதில் சில சீனியர் நிர்வாகிகள், பிரச்னைக்குரிய இரண்டு தரப்பினரையும் அழைத்து சமாதானம் செய்து வைத்திருக்காங்க.. 2026 சட்டமன்ற தேர்தல் வரும் நேரத்தில் கட்சியில் முட்டல் அதிகரித்து வருவதால் சீனியர்கள் கடும் அதிருப்தியில் இருக்காங்களாம்… நிர்வாகிகளுக்குள் முட்டல் மோதல் காரணமாக இருக்கும் மாநில நிர்வாகியான புரட்சியானவர்தான் என சில சீனியர் நிர்வாகிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றனராம்.. மாநில நிர்வாகி மீது புதிதாக பொறுப்பேற்றுள்ள மாநில தலைவரிடம் புகார் தெரிவிக்கவும் அவர்கள் முடிவு செய்திருக்காங்களாம்..
இந்த புகார் மீது மாநில நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் 2026 தேர்தலுக்கு முன்னதாக மாற்று கட்சிக்கு செல்லவும் திட்டமிட்டு இருப்பதாக கட்சிக்குள்ளே அரசல்புரசலாக பேச்சு ஓடுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புகார்களை தரம்பிரிச்சு சம்திங் வாங்குறதுதான் கொளுத்தும் வெயில்ல கூட கூலான டீலிங்கா போயிட்டு இருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலுக்கு பேர் போன மாவட்டத்துல இப்போ 105 டிகிரிக்கும் மேல வெயில் கொளுத்தி வருது.. ஆனா, பள்ளி கொண்ட ஊருல இருக்குற காக்கிகள் நிலையம் மட்டும் ‘ப’ வைட்டமின்ல நனையுதாம்.. நிலையத்துக்கு பொதுமக்கள் புகார் கொடுக்க வரும் போதே அந்த நிலையத்துல ராஜமான காக்கி, புகாரை வாங்கி பிரிச்சு பாத்து சம்திங் எவ்வளவு கிடைக்கும்னு எடை போடுறாராம்.. இப்படி புகார்களை தரம்பிரிச்சு, நெருக்கமான 2 ஸ்டார் காக்கிகள்கிட்ட அனுப்பி வைப்பாராம்.. புகார விசாரிச்சு வழக்கு பதியாம பேச்சுவார்த்தை முடிச்சு டீல் முடிஞ்ச அப்பறம் சம்திங்க சிதறாம பிரிச்சுக்குவாங்களாம்.. அதுஇல்லாம, சின்ன, சின்ன புகார்களை இவரே டீல் பன்னி முடிச்சு வைப்பாராம்.. புகாருக்கு தகுந்தபடி ரேட் பிக்ஸ் செஞ்சி ‘ப’ வைட்டமின்ல நனைஞ்சு வர்றாராம்.. இது சக காக்கிங்களிடையே கலக்கத்தையும், பொறாமையையும் ஏற்படுத்தியிருக்குதாம்.. அதுமட்டுமில்லாம 3 ஸ்டார் காக்கி விசாரிச்சு அனுப்பி வச்ச சில புகார்களையும் சம்பந்தப்பட்டவங்களோட தனியா டீலிங் பேசி ஒரு கை பார்த்துடுறாராம்.. இதனால ஸ்டேசனுக்கு வர்ற ஜனங்க சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத குறையா இருக்குதேன்னு புலம்புறாங்களாம்.. இந்த சத்தம் இப்ப வெளிய கேட்கத்தொடங்கியிருக்குது.. மாவட்ட உயர் காக்கிகளுக்கு கேட்குதான்னு பொறுத்திருந்துதான் பார்க்கணும்னு காக்கிகள் வட்டாரத்துல ஒரே பரபரப்பு பேச்சா இருக்கு..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.
The post புகார்களுடன் புதிய தலைவருக்கு தலைவலி கொடுக்கப்போகும் மலராத கட்சியின் சீனியர்கள் பற்றி சொல்கிறார் appeared first on Dinakaran.